செய்திகள்

சிதம்பரத்தில் உதவி பேராசிரியர் வீட்டில் 6 பவுன் நகை கொள்ளை

Published On 2016-11-10 17:06 IST   |   Update On 2016-11-10 17:07:00 IST
சிதம்பரத்தில் உதவி பேராசிரியர் வீட்டில் 6 பவுன் நகை, ரொக்கப்பணம் ரூ.10 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

சிதம்பரம்:

சிதம்பரம் அருகே உள்ள அம்மாபேட்டை மகாவீர் நகரைச் சேர்ந்தவர் எர்னோஸ்ட் ஜெயக்குமார் (வயது 34). சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவி ஜெயப்பிரியா (30). இவர் சிதம்பரம் அருகே கீழமூங்கிலடியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

கணவன்-மனைவி இருவரும் நேற்று வேலைக்கு சென்று விட்டனர். மதியம் சாப்பிடுவதற்காக எர்னோஸ்ட் ஜெயக்குமார் வீட்டுக்கு வந்தார்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 6 பவுன் நகை, ரொக்கப்பணம் ரூ.10 ஆயிரம் கொள்ளை போய் இருப்பது தெரியவந்தது.

பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர கொள்ளை குறித்து அண்ணாமலை நகர் போலீசில் எர்னோஸ்ட் ஜெயக்குமார் புகார் செய்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம மனிதர்களை தேடிவருகிறார்கள்.

Similar News