செய்திகள்

பண்ருட்டி அருகே லோன் வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.7½ லட்சம் மோசடி

Published On 2016-11-09 17:45 IST   |   Update On 2016-11-09 17:45:00 IST
பண்ருட்டி அருகே லோன் வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.7½ லட்சம் மோசடி செய்த டிரைவர் உள்பட4 பேரை போலீசார் விலைவீசி தேடி வருகிறார்கள்.

பண்ருட்டி:

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியை சேர்ந்தவர் செல்வமேரி (வயது 38). இவர் அந்த பகுதியில் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் செல்வமேரி வேலை சம்பந்தமாக பண்ருட்டியை அடுத்த மணம்தவழ்ந்தபுத்தூர் பகுதிக்கு வந்தார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் அன்பழகன் மற்றும் அவரது உறவினர்களான அதே பகுதியை சேர்ந்த சரளா, கவுசல்யா, நந்தினி ஆகியோரிடம் பழக்கம் ஏற்பட்டது.

பின்னர் அன்பழகன் மற்றும் அவரது உறவினர்கள் 3 பேரும் சேர்ந்து செல்வமேரியிடம் உங்கள் தொண்டு நிறுவனத்துக்கு நாங்கள் பல கோடி ரூபாய் லோன் வாங்கி தருகிறோம் என்று கூறினர். இதற்கு நீங்கள் முன்பணமாக ரூ.7½ லட்சம் கொடுக்க வேண்டும் என்று 4 பேரும் கூறினர்.

இதை நம்பிய செல்வமேரி 3 தவணையாக ரூ.7½ லட்சத்தை அவர்களிடம் கொடுத்தார். நாட்கள் பல ஆகியும் அவர்கள் 4 பேரும் செல்வமேரிக்கு சொன்னபடி லோன் வாங்கி கொடுக்கவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த செல்வமேரி அன்பழகன் உள்பட 3 பேரிட மும், நீங்கள் சொன்னபடி இதுவரை எனக்கு லோன் வாங்கி தரவில்லை. அதனால் நான் ஏற்கனவே உங்களிடம் கொடுத்துள்ள ரூ.7½ லட்சத்தை திருப்பி கொடுங்கள் என்று கேட்டார்.

இதை கேட்டு ஆத்திரம் அடைந்த அவர்கள் செல்வ மேரியை தகாதவார்த்தைகளால் திட்டி அனுப்பினர். நாம் ஏமாற்றப்பட்டோம் என்பதை செல்வமேரி உணர்ந்தார். இது குறித்து செல்வமேரி கடலூர் போலீஸ் சூப்பிரண்டிடம் அன்பழகன், சரளா, கவுசல்யா, நந்தினி ஆகிய 4 பேர் மீது புகார் கொடுத்தார்.

மனுவை பெற்றுக் கொண்ட போலீஸ் சூப்பிரண்டு பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு இது பற்றி விசாரிக்க உத்தரவிட்டார். அவரது அறிவுறுத்தலின்படி புதுப்பேட்டை போலீசார் அன்பழகன், சரளா, கவுசல்யா, நந்தினி ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

Similar News