செய்திகள்

உளுந்தூர்பேட்டையில் காதல் திருமணம் செய்த வாலிபருக்கு கத்திகுத்து: மர்ம மனிதனுக்கு வலைவீச்சு

Published On 2016-11-01 10:52 IST   |   Update On 2016-11-01 10:52:00 IST
உளுந்தூர்பேட்டையில் காதல் திருமணம் செய்த வாலிபரை கத்தியால் குத்திய மர்ம மனிதனை போலீசார் தேடி வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை:

உளுந்தூர்பேட்டை மார்டன் காலனி பகுதியை சேர்ந்தவர் வெங்கட் என்கிற சரவணகுமார் (வயது 21). இவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் வலை பின்னும் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

இவருக்கும், அதே நிறுவனத்தில் வேலை பார்த்த அதே பகுதியை சேர்ந்த சரண்யா (19) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

இது நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்தனர். இந்த நிலையில் இவர்களது காதல் சரண்யாவின் பெற்றோருக்கு தெரிய வந்தது. அவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதை அறிந்த அவர்கள் திருமணம் செய்து கொண்டு அங்கிருந்து திருச்சியில் உள்ள சரவணகுமாரின் உறவினர் வீட்டில் தஞ்சம் அடைந்தனர்.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்காக சரவணகுமார் தனது மனைவியுடன் சொந்த ஊரான உளுந்தூர்பேட்டைக்கு வந்தார்.

நேற்று இரவு சரவணகுமார் மட்டும் உளுந்தூர் பேட்டை- விருத்தாசலம் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் சரவணகுமாரை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி விட்டார்.

இதில் சரவணகுமார் காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணகுமாரை கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்ற மர்ம நபரை வலைவீசி தேடிவருகின்றனர்.

Similar News