செய்திகள்
நிகழ்ச்சியில் கவர்னர் கிரண்பேடி பேசிய போது எடுத்த படம்

தீபாவளி பரிசு பொருட்களை போலீசார் வாங்க கூடாது: கவர்னர் கிரண்பேடி கண்டிப்பு

Published On 2016-10-18 03:56 GMT   |   Update On 2016-10-18 03:56 GMT
தீபாவளி பண்டிகையின்போது பரிசுப்பொருட்கள், இனிப்புகள் ஆகியவற்றை போலீசார் இலவசமாக வாங்க கூடாது என்று கவர்னர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுவை போலீசாருக்கு வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்ச்சி கவர்னர் கிரண்பேடி தலைமையில் கம்பன் கலையரங்கில் நடைபெற்றது.

இதில், புதுவை போலீஸ் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம், சீனியர் போலீஸ் சூப்பிரண்டுகள் சந்திரன், ஏ.கே.கவாஸ், போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

புதுவை காவல்துறையில் கடந்த 4 மாதங்களில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக ‘பீட்’ போலீசாரால் எண்ணற்ற மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு ரோந்து செல்வதற்காக சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன.

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பயிற்சி முடித்து பணியில் சேரவுள்ள பெண் போலீசாருக்கும் ரோந்து செல்வதற்கு சைக்கிள் வழங்கப்படும்.

தங்களுடன் பணிபுரியும் போலீஸ் அதிகாரிகள் குற்றம் புரிந்தாலும் சக போலீசார் 1031 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் காவல்துறையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படாது. தீபாவளி பண்டிகையின்போது பரிசுப்பொருட்கள், இனிப்புகள் ஆகியவற்றை போலீசார் இலவசமாக வாங்க கூடாது. கடைகளில் பணம் கொடுத்தே வாங்க வேண்டும். உயர் அதிகாரிகளுக்கும் பரிசு பொருட்கள், பூங்கொத்துகள், இனிப்பு ஆகியவை வழங்க கூடாது.

புதுவை காவல்துறையில் தவறு செய்யும் போலீசார் பணி இடைநீக்கம் செய்வதற்கு பதிலாக உடனடியாக பணிநீக்கம் செய்யப்படுவார்கள். போலீசார் அனைவரும் தங்களது ஊதியத்தில் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.

காவல்துறை பணியை சேவையாக பார்க்கவேண்டும். காவல்துறையை பணம் சம்பாதிக்கும், வியாபாரமாக பார்க்கக்கூடாது.

இவ்வாறு அவர் பேசினார்.

Similar News