செய்திகள்

பண்ருட்டி அருகே தேர்தல் முன்விரோதத்தில் பஞ். தலைவர் வீடு சூறை- மினி லாரி உடைப்பு

Published On 2016-10-16 15:38 GMT   |   Update On 2016-10-16 15:38 GMT
பண்ருட்டி அருகே தேர்தல் முன்விரோதத்தில் பஞ். தலைவர் வீட்டின் கதவு மற்றும் ஜன்னலை உடைத்தனர். வீட்டில் இருந்த மேஜை, நாற்காலி உள்பட பல்வேறு பொருட்களை அடித்து உடைத்து சூறையாடினர்.

பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட எனதிரி மங்கலம் பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் காசிலிங்கம் (வயது 45). அ.தி.மு.க. பிரமுகர். இவர் இன்று காலை எனதிரி மங்கலத்திலிருந்து பண்ருட்டிக்கு மோட்டார் சைக்கிளில் வந்துவிட்டார். அவரது குடும்பத்தினர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று விட்டார்கள்.

இந்த நிலையில் இன்று காலை அதே பகுதியை சேர்ந்த சிலர் அங்கு வந்தனர். வீட்டின் மீது சரமாரியாக கல்வீசி தாக்கினர். பின்னர் வீட்டின் கதவு மற்றும் ஜன்னலை உடைத்தனர். வீட்டில் இருந்த மேஜை, நாற்காலி உள்பட பல்வேறு பொருட்களை அடித்து உடைத்து சூறையாடினர்.

இதையடுத்து வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த மினி லாரியையும் உடைத்து சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து புதுப்பேட்டை போலீசில் காசிலிங்கம் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தேர்தல் முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் நடந்தது தெரியவந்தது.

பஞ்சாயத்து தலைவர் வீட்டை சூறையாடியவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. அசாம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Similar News