செய்திகள்

திருவள்ளூர் அருகே போலி ஆவணம் தயாரித்து ரூ.2 கோடி வீட்டுமனைகளை விற்க முயற்சி: வாலிபர் கைது

Published On 2016-10-15 09:16 GMT   |   Update On 2016-10-15 09:16 GMT
திருவள்ளூர் அருகே போலி ஆவணம் தயாரித்து ரூ.2 கோடி மதிப்பிலான வீட்டுமனைகளை விற்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர்:

திருவள்ளூர் கோவில் குப்பம் கிராமத்தில் பெருமாள் நாயுடு என்பவருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலம் இருந்தது. இந்த சொத்து தியாகசுந்தரம் என்பவருக்கு பொது அதிகாரம் வழங்கப்பட்டு, 36 வீட்டுமனைகளாக பிரிக்கப்பட்டு, 1998ம் ஆண்டு ‘சென்னை கமர்சியல் எம்ப்ளாயிஸ் கூட்டுறவு கட்டிட சங்கம்' என்ற நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிறுவனத்தினர் வீட்டுமனைகளை ரெப்கோ வங்கியில் அடமானம் வைத்து, வாங்கிய கடன் தொகையை திருப்பி செலுத்தாததால், 2005ம் ஆண்டு பொது ஏலம் விடப்பட்டு, சென்னை விருகம்பாக்கம் மகேந்திரன்(52) என்பவர் ஏலம் எடுத்து அனுபவித்து வந்தார்.

இந்நிலையில், 36 வீட்டு மனைகளை கடந்த 2012ம் ஆண்டு பெருமாள் நாயுடுவின் வாரிசுகளான கொட்டாமேடு கிராமத்தை சேர்ந்த கஸ்தூரி, ரஜினியம்மாள் ஆகியோர் தங்களுக்குள் பாகப்பிரிவினை செய்து கொண்டு, தங்களது வாரிசுகளான செந்தில் குமார், வளர்மதி, ஹேமலதா ஆகியோருடன் சேர்ந்து, போலி ஆவணம் தயாரித்து 36 வீட்டு மனைகளையும் அபகரித்து உள்ளனர். இதன் மதிப்பு ரூ.2 கோடி ஆகும்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மகேந்திரன், திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சனிடம் புகார் கொடுத்தார். இப்புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அவர் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.

இன்ஸ்பெக்டர் நந்தகோபால், சப்-இன்ஸ்பெக்டர் லியோ பிரான்சிஸ் ஆகியோர், வழக்குப்பதிவு செய்து போலி ஆவணம் தயாரித்து வீட்டுமனைகளை அபகரித்த கொட்டாம்பேடு கிராமத்தை சேர்ந்த செந்தில் குமார் என்பவரை கைது செய்து, திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Similar News