செய்திகள்

போதையில் வந்த அரசு டாக்டர்- ஆஸ்பத்திரிக்குள் பூட்டி பொதுமக்கள் போராட்டம்

Published On 2016-10-15 12:43 IST   |   Update On 2016-10-15 12:43:00 IST
திண்டுக்கல் அருகே போதையில் பணிக்கு வந்த அரசு டாக்டரை பொதுமக்கள் அறைக்குள் பூட்டி வைத்து போராட்டம் நடத்தினர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் அருகில் உள்ள சாணார்பட்டி யூனியன் கொசவபட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த ஆஸ்பத்திரியில் 4 டாக்டர்கள் பணியில் உள்ளனர்.

இங்கு பணியில் உள்ள ஹரிகிருஷ்ணன் என்ற டாக்டர் கடந்த சில நாட்களாக போதையில் வந்து நோயாளிகளுக்கு சிச்சை அளித்து வந்துள்ளார். நேற்றும் ஆஸ்பத்திரிக்கு வந்த ஹரிகிருஷ்ணன் போதையில் மருந்து மாத்திரிகைள் எழுதி கொடுத்தார். அவரது நடவடிக்கையை பார்த்து பொதுமக்கள் மற்ற டாக்டர்களிடம் புகார் தெரிவித்தனர்.

மேலும் ஹரிகிருஷ்ணன் போதையில் பேசியதை செல்போனிலும் படம் பிடித்தனர். மற்ற டாக்டர்கள் ஹரிகிருஷ்ணனுக்கு ஆதரவாக பேசியதால் போதையில் இருந்த அவரை ஒரு அறையில் வைத்து பூட்டினர்.

சம்பவம் குறித்து கேள்வி பட்டதும் நத்தம் எம்.எல்.ஏ ஆண்டிஅம்பலம் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் அங்கு வந்தனர்.

அவர்கள் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்மந்தப்பட்ட டாக்டர் குறித்து மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

ஹரிகிருஷ்ணன் ஈரோட்டில் பணிபுரிந்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் திண்டுக்கல்லுக்கு மாறுதலாகி வந்துள்ளார். இதய நோயாளியான இவர் தொடர்ந்து மது அருந்தி வந்ததை மற்ற டாக்டர்கள் கண்டித்தபோதும் கேட்கவில்லை.

நேற்று போதையிலேயே நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததும், அறையில் வைத்து பூட்டப்பட்ட சம்பவமும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News