நெல்லிக்குப்பம் அருகே மாணவியை கத்தியால் குத்தி நகை பறிப்பு
நெல்லிக்குப்பம்:
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே உள்ள திருமானிக்குழி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி அனுராதா. இவர்களது மகள் ஹரினி(வயது 14). அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
கண்ணன் சமீபத்தில் இறந்து விட்டார். இதையடுத்து அனுராதா தனது மகள் ஹரினி மற்றும் தாய் பிரேமா, தந்தை சதாசிவம் ஆகியோருடன் வசித்து வருகிறார்.
நேற்று இரவு அனுராதா குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு 2 மணியளவில் 2 மர்ம வாலிபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
அந்த வாலிபர்கள் தூங்கிக் கொண்டிருந்த அனுராதாவின் கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்கச்சங்கிலியை பறித்தனர். பின்னர் ஹரினி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியையும் பறிக்க முயன்றனர். தூக்கத்தில் இருந்த ஹரினி திடுக்கிட்டு எழுந்தார்.
தங்கசங்கிலியை பறிக்க முயன்ற வாலிபர்களை தடுக்க முயன்றார். ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் ஹரினியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினர். அவர் அபயக்குரல் எழுப்பினார். இதனால் கொள்ளையர்கள் ஹரினியின் கழுத்தில் கத்தியால் குத்தினர். இதில் அவர் காயம் அடைந்தார்.
இதையடுத்து ஹரினி அணிந்திருந்த 2 பவுன் தங்கச்சங்கிலியை கொள்ளையர்கள் பறித்தனர். சத்தம் கேட்டு பிரேமாவும், சதாசிவமும் எழுந்து வந்தனர். ‘திருடன் திருடன்’ என்று சத்தம் போட்டனர். உடனே கொள்ளையர்கள் வீட்டின் பின்பக்க வழியாக தப்பி ஓடினர்.
கொள்ளையர்கள் பற்றி தகவல் அறிந்த பொதுமக்கள் அங்கே திரண்டு வந்தனர். கொள்ளையர்களை பிடிக்க விரட்டி சென்றனர். அதற்குள் அவர்கள் கரும்பு தோட்டத்துக்குள் தப்பி ஓடிவிட்டனர்.
நகைபறிப்பு குறித்து நடுவீரப்பட்டு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராமநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். கொள்ளையர்கள் குறித்து மாணவி ஹரினியிடம் விசாரித்தனர்.
அப்போது அவர் கொள்ளையர்கள் முகத்தில் கருப்பு துணி கட்டியிருந்தனர் என்று கூறினார். எனவே முகமூடி கொள்ளையர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
முகமூடி கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த கொள்ளை சம்வம் அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.