கடலூர் வியாபாரி திடீர் பலி: புறக்காவல் நிலையத்தில் 1 மணி நேரம் உயிருக்கு போராடிய பரிதாபம்
கடலூர் வன்னியர் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது அன்சாரி(வயது 63). வியாபாரி. கடலூர் பஸ் நிலையம் அருகே கடை வைத்துள்ளார்.
வெளிநாட்டு பொருட்களை வாங்கி விற்பனை செய்து வந்தார். சென்னைக்கு சென்று வெளிநாட்டுப் பொருட்களை அவர் வாங்கி வருவது வழக்கம்.
அதன்படி இன்று காலை 7.30 மணிக்கு கடலூர் பஸ்நிலையத்துக்கு ரூ.1 லட்சம் பணத்துடன் வந்தார். சென்னை செல்வதற்காக அரசு பஸ்சில் ஏறி அமர்ந்தார். அப்போது திடீரென்று அவருக்கு மயக்கம் ஏற்பட்டது.
இதைபார்த்த கண்டக்டர் மற்றும் பொதுமக்கள் அவரை பஸ்சில் இருந்து இறக்கி பஸ்நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரைபார்த்துக் கொள்ளும்படி சொல்லி விட்டு சென்றுவிட்டனர்.
புறக்காவல் நிலையத்தில் மயங்கிய நிலையிலேயே முகமது அன்சாரி வெகுநேரம் இருந்தார். அப்போது அவரது மகள் நூர் செல்போனில் பேசினார். அதை எடுத்து பேசிய புறக்காவல் நிலைய போலீசார் முகமது அன்சாரி மயங்கிய நிலையில் இருப்பதை கூறினர்.
உடனே அவர் வன்னியர்பாளையத்தில் இருந்து ஆட்டோவில் அங்கு வந்தார். முகமது அன்சாரியை ஆட்டோவில் ஏற்றி மஞ்சக்குப்பத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆனால் வழியிலேயே முகமது அன்சாரி மாரடைப்பால் இறந்துவிட்டார்.
இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புறக்காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட முகமது அன்சாரியை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு உடனடியாக கொண்டு சென்று இருந்தால் அவரை காப்பாற்றி இருக்கலாம் ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
முகமது அன்சாரி மகள் தற்செயலாக செல்போனில் தனது தந்தையிடம் தொடர்பு கொண்டதன் மூலம் அவர் நெஞ்சுவலியால் துடித்தது அவருக்கு தெரியவந்தது. அவர் விரைந்து வந்து தனது தந்தையை காப்பாற்ற ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆனாலும் முகமது அன்சாரி இறந்து விட்டார்.
1 மணிநேரமாக புறக்காவல் நிலையத்தில் முகமது அன்சாரி உயிருக்காக போராடி உள்ளார். நெஞ்சுவலியால் துடித்துள்ளார். அவரை காப்பற்ற நட வடிக்கை எடுக்காமல் இருந்த போலீசாரின் செயல் கண்டிக்கதக்கது. போலீசாரின் அலட்சியத்தால் வியாபாரியின் உயிர் போய்விட்டது.
பஸ்நிலையத்திற்கு பல்வேறுபட்ட பொதுமக்கள் வருவார்கள். போலீசார் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.