செய்திகள்

வகுப்பறையில் சிரித்ததாக கூறி பள்ளி மாணவனை தாக்கி கொலை மிரட்டல்: தாளாளர் மகன் மீது போலீசில் புகார்

Published On 2016-07-30 16:20 IST   |   Update On 2016-07-30 16:20:00 IST
சேத்தியாதோப்பு அருகே பள்ளி மாணவன் மீது தாக்குதல் நடத்தி அவனுக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிதம்பரம்:

சிதம்பரத்தை அடுத்துள்ள சேத்தியாதோப்பு அருகே பாழ்வாய்க்கால் என்ற பகுதியில் தனியார் மெட்ரிக் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் வெய்யலூர் கிராமத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் ஸ்ரீதரன் (வயது 15) 10–ம் வகுப்பு படித்து வருகிறார்.

ஸ்ரீதரன் வகுப்பறையில் சிரித்ததாக கூறப்படுகிறது. எனவே வகுப்பு ஆசிரியர் புகார் தெரிவிப்பதற்காக தாளாளரின் அறைக்கு சென்றார். அங்கு அவர் இல்லை. தாளாளரின் மகன் சுஜின் இருந்தார்.

அவரிடம் வகுப்பு ஆசிரியர் புகார் செய்தார். உடனே மாணவன் ஸ்ரீதரனை அழைத்து வர கூறினார்.

அதன்படி வகுப்பு ஆசிரியர் ஸ்ரீதரனிடம், “உன்னை தாளாளர் மகன் கூப்பிடுகிறார். அவரை பார்த்து வா” என்று கூறி அனுப்பி வைத்தார்.

அறைக்குள் சென்றவுடன் சுஜின் அறைக்கதவை மூடினார். பின்னர் மாணவன் ஸ்ரீதரனை அவர் தாக்கியதாக தெரிகிறது. இதில் ஸ்ரீதரனுக்கு கால் மற்றும் முதுகில் காயம் ஏற்பட்டது.

அத்துடன் நிறுத்தாமல் அந்த மாணவனிடம், சுஜின், இங்கு நடந்த வி‌ஷயத்தை வெளியே கூறக்கூடாது. அப்படி மீறி சொன்னால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று கூறி கொலை மிரட்டலும் விடுத்ததாக தெரிகிறது.

இதனால் அச்சம் அடைந்த மாணவன் தனது பெற்றோரிடம் இது பற்றி தகவல் தெரிவிக்காமல் இருந்தார்.

தனது மகனின் நடவடிக்கையில் மாற்றம் இருப்பதை கண்ட பெற்றோர் அவனை அழைத்து என்ன ஏது? என்று விசாரித்தனர். அப்போது ஸ்ரீதரன் பள்ளியில் நடந்த விவரத்தை கூறினார்.

இதையடுத்து பெற்றோர் ஸ்ரீதரனை சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இது குறித்து ஒரத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது குறித்து மாணவன் கூறும்போது, “பள்ளியில் நான் சிரிக்கவில்லை. என் பின்னால் இருந்த மாணவர்கள் தான் சிரித்தார்கள். ஆனால், என்னை வகுப்பு ஆசிரியர் திட்டினார்.

அதோடு விட்டுவிடாமல் தாளாளர் மகனிடம் புகார் கூறியதால் அவரும் என்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் என் பெற்றோரிடம் எந்த தகவலையும் நான் கூறவில்லை. எனது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த பெற்றோர் என்னிடம் விசாரித்ததால் நான் பள்ளியில் நடந்த சம்பவத்தை கூறினேன்” என்றார்.

பள்ளி மாணவன் மீது தாக்குதல் நடத்தி அவனுக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News