செய்திகள்
மாயமான பார்த்திபன்

பண்ருட்டியில் வரதட்சணை பணத்தை வாங்கிக்கொண்டு மணமகன் மாயமானதால் நின்றுபோன திருமணம்

Published On 2016-07-29 11:21 IST   |   Update On 2016-07-29 11:21:00 IST
வரதட்சணை பணம் ரூ.1 லட்சத்தை வாங்கிக்கொண்டு மணமகன் மாயமானதால் நின்றுபோன திருமணத்தால் பண்ருட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.
பண்ருட்டி:

பண்ருட்டி அருகே உள்ள மேல்குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கலியபெருமாள். இவரது மகன் பார்த்திபன் (வயது 35). லாரி டிரைவர்.

இந்த நிலையில் பார்த்திபனுக்கும், சிதம்பரத்தை அடுத்துள்ள கார்மாங்குடி கிராமத்தைச் சேர்ந்த துர்காதேவி (25) என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

திருமணம் நேற்று (28-ந்தேதி) பண்ருட்டியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெறுவதாக இருந்தது. பெண் வீட்டார் திருமண ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

இந்த நிலையில் வரதட்சணையாக பார்த்திபனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்கி தருவதாக பெண் வீட்டில் கூறி இருந்தனர்.

இதையொட்டி கடந்த 23-ந்தேதி பார்த்திபன் கார்குடி கிராமத்திற்கு சென்றார். அங்கு துர்காதேவியின் தந்தையிடம் மோட்டார் சைக்கிளை நானே வாங்கி கொள்கிறேன். என்னிடம் ரூ.1 லட்சம் கொடுங்கள் என்று கூறினார். இதை நம்பிய பெண் வீட்டார் அவரிடம் பணத்தை கொடுத்தனர்.

பணத்தை வாங்கிக் கொண்டு சென்ற பார்த்திபனிடம் இருந்து இதுவரை எந்த தகவலும் இல்லை. செல்போனில் தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த பெண் வீட்டார் பார்த்திபனை தேடி அவரது வீட்டிற்கு நேரில் வந்தனர். மாப்பிள்ளை எங்கே? பலமுறை நாங்கள் அவரை போனில் தொடர்பு கொண்டும் போன் சுவிட்ச் ஆப் என்றே வருகிறது. எங்களிடம் இருந்து ரூ.1 லட்சம் வாங்கி கொண்டு வந்தார்.

அதன் பின்னர் அவரை பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை என பார்த்திபனின் தந்தை கலியபெருமாளிடம் கேட்டனர். அதற்கு கலியபெருமாள் என் பையன் உங்களிடம் இருந்து பணம் வாங்கி சென்றபின்னர் வீட்டிற்கு வரவில்லை. நாங்களும் அவனை பல இடங்களில் தேடினோம். எங்களாலும் அவனை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கூறினர்.

இந்த பதிலை கேட்ட பெண் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். தங்கள் மகள் திருமணம் நடக்காமல் போய் விடுமோ என்று கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

இது குறித்து கலியபெருமாள் பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பார்த்திபன் யாரையாவது காதலித்தாரா? பணத்தை வாங்கி கொண்டு வேறு எங்கும் அவர் தலைமறைவாகி விட்டாரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நேற்று திருமணம் நடக்க இருந்த நிலையில் மணமகன் மாயமானதால் திருமணம் நின்று போனது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருமணத்திற்கு வந்த உறவினர்கள் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.

Similar News