செய்திகள்

ராட்சத அலையில் சிக்கி படகு கவிழ்ந்தது: கடலில் மூழ்கி மீனவர் சாவு

Published On 2016-07-28 12:39 IST   |   Update On 2016-07-28 12:39:00 IST
கடல் சீற்றத்தின் காரணமாக திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கி படகு கவிழ்ந்தது. இதில் மீனவர் கடலில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
கடலூர்:

கடலூர் அம்பலவாணன் பேட்டையில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் வசிப்பவர்கள் குணசேகரன் (வயது 40), சசிகுமார் என்ற ராஜன் (32). மீனவர்கள்.

இவர்கள் 2 பேரும் இன்று காலை கடலில் மீன்பிடிப்பதற்காக படகில் சென்றனர். அந்த நேரத்தில் கடலில் அலையின் சீற்றம் அதிகமாக இருந்து. திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கி படகு கவிழ்ந்தது. குணசேகரனும், சசிகுமாரும் கடலில் மூழ்கினர். இதில் சசிகுமார் நீந்தி கரை சேர்ந்தார். குணசேகரன் நீச்சல் அடித்து கரைக்கு வர முயன்றார். அவரது முயற்சிக்கு பலன் இல்லை.

சிறிது நேரத்தில் கடலில் மூழ்கி குணசேகரன் பரிதாபமாக இறந்தார். கரை திரும்பிய சசிகுமார் இதுகுறித்து ஊர் பிரமுகர்களிடம் கூறினார். அவர்கள் கடற்கரைக்கு சென்றனர். அங்கு குணசேகரனின் உடல் கரை ஒதுங்கி கிடந்தது. அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறிதுடித்தது கல் நெஞ்சையும் கரையவைப்பதாக இருந்தது.

கடலூரில் இன்று மீனவர் கடல் அலையில் சிக்கி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் துறைமுகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News