செய்திகள்

குரோம்பேட்டையில் பெண் கொலை வழக்கில் உறவினர் கைது

Published On 2016-06-16 03:49 IST   |   Update On 2016-06-16 03:49:00 IST
குரோம்பேட்டையில் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது நெருங்கிய உறவினரான என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர். கடன் பிரச்சினையில் இந்த கொலை நடந்தது விசாரணையில் தெரிந்தது.
தாம்பரம்:

சென்னையை அடுத்த குரோம்பேட்டை பாரதிபுரம் நெல்லையப்பர் தெருவைச் சேர்ந்தவர் ஜெயமுருகன். இவர், தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி கிருஷ்ணவேணி (வயது 37).

நேற்று முன்தினம் மாலை வீட்டில் தனியாக இருந்த கிருஷ்ணவேணி, கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின்பேரில் சிட்லபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலையாளியை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

கிருஷ்ணவேணி தினமும் குரோம்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் தனது இரு குழந்தைகளையும் மொபட்டில் சென்று கொண்டு விடுவது வழக்கம். நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்றுவிட்டு மொபட்டை பழுது பார்க்க மெக்கானிக் கடையில் விட்டு விட்டு வீட்டுக்கு வந்து உள்ளார்.

வீட்டில் மெயின் கதவு அருகில் கிரில் கேட்டும், அதற்கு முன்னால் மற்றொரு இரும்பு கேட்டும் உள்ளது. எப்போதும் கேட்டை மூடி விட்டுத்தான் உள்ளே இருப்பார். அதிகமாக வெளிஆட்களிடம் பேசமாட்டார்.

இதனால் கிருஷ்ணவேணிக்கு தெரிந்த நபர்தான் இந்த கொலையை செய்து இருக்கவேண்டும் என போலீசார் முடிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

கிருஷ்ணவேணியின் செல்போனில் வந்த நம்பர்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில் கொலை செய்யப்பட்ட கிருஷ்ணவேணியின் கணவர் ஜெயமுருகனின் தங்கை கணவர் போத்திராஜ் என்பவரின் சகோதரி மகன் அருண்குமார்(24) மீது போலீசார் சந்தேகம் அடைந்தனர்.

அதன்பேரில் நேற்று மாலை அருண்குமாரை, போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

கிருஷ்ணவேணியின் கணவர் ஜெயமுருகனின் உறவினரும், அருண்குமாரின் தந்தையுமான எழும்பூர் சாமி தெருவில் வசிக்கும் தர்மலிங்கம் என்பவருக்கு கடந்த 6 மாதத்துக்கு முன்பு ஜெயமுருகன், ரூ.50 ஆயிரம் கடன் கொடுத்து உள்ளார்.

அந்த கடன் தொகையை தர்மலிங்கம் திருப்பிக்கொடுக்காததால் கிருஷ்ணவேணி போனில் தொடர்பு கொண்டு அவரிடம் கடன் தொகையை திரும்ப தரும்படி கேட்டு உள்ளார்.  அப்போது தர்மலிங்கத்தை கிருஷ்ணவேணி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் தர்மலிங்கத்தின் மகன் அருண்குமார் ஆத்திரம் அடைந்தார். நேற்று முன்தினம் காலை 10.30 மணிக்கு வீட்டில் கிருஷ்ணவேணி தனியாக இருப்பதை அறிந்து மோட்டார் சைக்கிளில் எழும்பூரில் இருந்து குரோம்பேட்டைக்கு அருண்குமார் வந்தார்.

வீட்டில் தனியாக இருந்த கிருஷ்ணவேணியிடம் இது தொடர்பாக தகராறு செய்தார். அப்போது வீட்டில் இருந்த தலையணையால் அவரது முகத்தில் வைத்து அழுத்தினார். இதில் கிருஷ்ணவேணி மயக்கம் அடைந்தார்.

அவருக்கு நினைவு திரும்பினால் தன்னை காட்டிக்கொடுத்து விடுவார் என பயந்த அருண்குமார், வீட்டில் காய்கறி வெட்ட வைத்திருந்த கத்தியை எடுத்து கிருஷ்ணவேணியின் கழுத்து, விலா பகுதிகளில் சரமாரியாக குத்தி கொலை செய்து விட்டு தப்பிச்சென்றது விசாரணையில் தெரியவந்தது.

இது தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான அருண்குமார், என்ஜினீயர் ஆவார். ஆனால் தற்போது வேலை இல்லாமல் வீட்டில் இருந்து வந்து உள்ளார்.

பெண் கொலை வழக்கில் அவரது நெருங்கிய உறவினரே அவரை கொலை செய்து உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News