கோபி:
கோபியை அடுத்த சிங்கிரிபாளையம், கணேசபுரம், வாய்க்கால் மேடு பகுதியை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மனைவி லட்சுமி (வயது27). இவர்களுக்கு லத்திகா(5), பவானி(3), என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் ஆகி 6 வருடம் ஆகிறது.
பழனிவேல் அதே பகுதியை சேர்ந்த சந்திரசேகரன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள வாடகை வீட்டில் குடும்பத்துடன் தங்கி உள்ளார். இந்நிலையில் லட்சுமிக்கு வயிற்று வலி இருந்துள்ளது. இதற்காக அவர் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் வயிற்று வலிகுணமாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த லட்சுமி தற்கொலை செய்ய முடிவெடுத்து சம்பவத்தன்று இரவில் உடலில் மண்ணெண்னை ஊற்றி தீக்குளித்தார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் லட்சுமியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்திய மங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். எனினும் போகும் வழியிலேயே லட்சுமி பரிதாபமாக இறந்தார். இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமாகி 6 வருடமே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணை விசாரித்து வருகிறார்.