செய்திகள்

தபால் பெட்டியில் கிடந்தவை காலாவதியான பாஸ்போர்ட்டுகளா?:தகவல் தெரிவிக்குமாறு குடியுரிமை அதிகாரிகளுக்கு போலீஸ் கடிதம்

Published On 2016-06-13 02:32 IST   |   Update On 2016-06-13 02:32:00 IST
நங்கநல்லூர் தபால் பெட்டியில் கிடந்த பாஸ்போர்ட்டுகள் காலாவதியானவையா? என்பது பற்றி தகவல் தெரிவிக்குமாறு குடியுரிமை அதிகாரிகளுக்கு போலீசார் கடிதம் எழுதி உள்ளனர்.
ஆலந்தூர்:

சென்னை நங்கநல்லூர் மார்க்கெட் பகுதி அருகே 48-வது தெருவில் உள்ள தபால் பெட்டியில் கடந்த 2-ந் தேதி கடிதங்களை எடுக்க முயன்றபோது கட்டுக்கட்டாக 23 பாஸ்போர்ட்டுகள் இருந்ததை கண்ட தபால் ஊழியர் அதிர்ச்சி அடைந்தார். ஆய்வு செய்த தபால் துறை அதிகாரிகள் பாஸ்போர்ட்டுகளை பழவந்தாங்கல் போலீசில் ஓப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி 13 பாஸ்போர்ட்டுகளும், 8-ந் தேதி 15 பாஸ்போர்ட்டுகளும் தபால் பெட்டியில் இருந்து கண்டெடுக்கப்பட்டன. பாஸ்போர்ட்டுகளை கைப்பற்றிய போலீசார் தபால் பெட்டியில் பாஸ்போர்ட்டுகளை போட்டு சென்றது யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக மடிப்பாக்கம், உள்ளகரம் பகுதியைச் சேர்ந்த 3 பேரிடம் விசாரணை நடத்தியதில் வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு வந்தபோது விமான நிலையத்தில் பாஸ்போர்ட்டு மாயமாகி விட்டதாகவும், இதுகுறித்து போலீசில் புகார் செய்து மாற்று பாஸ்போர்ட்டுகளை பெற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தனர்.

இதனையடுத்து மற்ற பாஸ்போர்ட்டுகளில் இருந்த முகவரிக்கு போலீசார் கடிதம் எழுதியுள்ளனர். அதில் போலீஸ் விசாரணைக்கு நேரில் வருமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் தபால் பெட்டியில் கிடந்த பாஸ்போர்ட்டுகள் காலாவதியாகி விட்டதா? அல்லது அதற்கு பதிலாக வேறு பாஸ்போர்ட்டுகள் பெறப்பட்டு உள்ளதா? என்ற விவரங்களை தெரிவிக்குமாறு சென்னையில் உள்ள குடியுரிமை அதிகாரிகளுக்கு போலீசார் கடிதம் எழுதி உள்ளனர்.

Similar News