செய்திகள்

புதுக்கோட்டையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை

Published On 2016-06-07 09:51 IST   |   Update On 2016-06-07 09:51:00 IST
புதுக்கோட்டையில் ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை காமராஜர் புரம் மரக்கடை வீதி பி.ஆர்.ஆர். முக்கம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 58). ஓய்வு பெற்ற சர்வேயர். இவரது மனைவி சாந்தா (54). இவர்களுக்கு ராதாகிருஷ்ணன் (26) என்ற மகனும், அபிராமி (24) என்ற மகளும் உள்ளனர்.

ராதாகிருஷ்ணன் அப்பகுதியில் செல்போன் பழுது பார்க்கும் கடை வைத்து நடத்தி வந்தார். அபிராமியை தஞ்சாவூரை சேர்ந்த ஒருவருக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்தனர்.

இதற்கிடையே கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அபிராமி கணவரை பிரிந்து புதுக்கோட்டையில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார். அங்கு கடந்த ஒரு வருடமாக பெற்றோருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 4-ந் தேதி முதல் கண்ணன் வீடு திறக்கப்படாமல் இருந்தது. அவர் குடும்பத்தினருடன் வெளியூருக்கு சென்றிருப்பார் என்று நினைத்து அக்கம் பக்கத்தினர் இருந்து விட்டனர். இன்று அதிகாலை கண்ணன் வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது.

இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் வீட்டிற்கு சென்று பார்த்த போது, வீட்டின் முன்பக்க கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. கண்ணன் பெயரைக் கூறி பொதுமக்கள் அழைத்த போது, உள்ளே இருந்து எந்தவித சத்தமும் வரவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இதுகுறித்து உடனடியாக கணேஷ் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டிற்குள் கண்ணன், ராதா கிருஷ்ணன், அபிராமி ஆகிய 3 பேரும் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினர். சாந்தா வீட்டின் படுக்கையறையில் பிணமாக கிடந்தார்.

4 பேரின் உடல்களும் முற்றிலும் அழுகியிருந்தது. இதனால் அவர்கள் இறந்து 5 நாட்களுக்கு மேல் ஆகியிருக்கலாம் என தெரிகிறது. போலீசார் 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அவர்கள் எப்படி இறந்தார்கள் என்று விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் கண்ணன், ராதாகிருஷ்ணன், அபிராமி ஆகிய 3 பேரும் தூக்குப் போட்டு தற்கொலை செய்ததும், சாந்தா விஷம் குடித்து தற்கொலை செய்ததும் தெரிய வந்தது.

தற்கொலைக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. அபிராமி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்ததன் காரணமாக மனமுடைந்து தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்தனரா? என்றும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை செய்வதற்கு முன்பு கண்ணன் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் ஒன்றை போலீசார் மீட்டனர். அதில் உள்ள எழுத்துக்கள் அழிந்துள்ளதால், கண்ணன் என்ன எழுதியுள்ளார் என்று தெரியவில்லை. அது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் 4 பேரின் தற்கொலைக்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல் வெளியாக வாய்ப்புள்ளது.

ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் புதுக்கோட்டை பகுதி பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News