செய்திகள்

வாட்டாத்திக்கோட்டை அருகே 2 பெண்களிடம் நகை பறிப்பு

Published On 2016-05-22 17:55 IST   |   Update On 2016-05-22 17:55:00 IST
வாட்டாத்திக்கோட்டை அருகே 2 பெண்களிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவோணம்:

தஞ்சை மாவட்டம் வாட்டாத்திக்கோட்டை போலீஸ் சரகத்திற்குட்பட்ட பாலத்தளி மணவயல் கிராமத்தை சேர்ந்தவர் கருத்தஆரான். இவருடைய மனைவி தையல் (வயது65).

இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிகொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள் தையல் கழுத்தில் கிடந்த 5 கிராம் தங்க சங்கிலியை பறித்து சென்றுவிட்டனர்.

இதே போல் தையல் பக்கத்து வீட்டில் வசிப்பவர் அண்ணாத்துரை. இவருடைய மனைவி சுமதி (45). இவர் நள்ளிரவில் வீட்டின் முகப்பு வராண்டாவில் தூங்கிகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த டவுசர் அணிந்திருந்த ஒரு கொள்ளையன் தூங்கிகொண்டிருந்த சுமதியின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறித்தான். இதனை கண்டு திடுக்கிட்ட சுமதி தனது சங்கிலியை பிடித்துக்கொண்டு கொள்ளையனுடன் போராடினார். இதனால் சங்கிலி துண்டானது. இதில் கையில் சிக்கிய 4 கிராம் தங்க சங்கிலியை பறித்துகொண்டு திருடன் அங்கிருந்து தப்பி ஓடினான். இவனை கிராம மக்கள் விரட்டி சென்றனர். அப்போது வெளியில் நின்றுக்கொண்டிருந்த 3 வாலிபர்களுடன் சேர்ந்து சம்பந்தப்பட்ட டவுசர் கொள்ளையன் உள்ளிட்ட 4 பேரும் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் ஒரத்தநாடு போலீஸ் துணை சூப்பிரண்டு செங்கமலக்கண்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன், வாட்டாத்திக் கோட்டை போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் பாரதிதாசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தினர். மேலும் சுமதியின் கணவர் அண்ணாத்துரை கொடுத்த புகாரின்பேரில் வாட்டாத்திக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து டவுசர் கொள்ளையர்களை வலைவீசி தேடிவருகின்றனர்

Similar News