ஜெயலலிதாவுக்கு தோல்வி பயம் வந்து விட்டது: விஜயகாந்த்
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் தே.மு.தி.க.– மக்கள் நல கூட்டணி– த.மா.கா. சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு கூட்டணி கட்சி வேட்பாளர்களான பண்ருட்டி–சிவக்கொழுந்து (தே.மு.தி.க.), நெய்வேலி–ஆறுமுகம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), கடலூர்–சந்திரசேகரன் (தமிழ் மாநில காங்கிரஸ்), குறிஞ்சிப்பாடி–பாலமுருகன் (தே.மு.தி.க.) ஆகியோரை ஆதரித்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:–
தேர்தல் பிரசார கூட்டத்தில் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மக்களுக்கு காசு கொடுத்து கூட்டத்தை கூட்டுகிறார்கள். இங்கு வந்துள்ள கூட்டம் காசு கொடுத்து வந்த கூட்டம் அல்ல. அவர்களாகவே வந்த கூட்டம்.
ஆட்சியின்போது கொள்ளையடித்த பணத்தை தேர்தல் நேரத்தில் எப்படியெல்லாம் செலவு செய்கிறார்கள் பாருங்கள்.
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூரில் மழை வெள்ளம் வந்தபோது மின்சாரம் இல்லை. தானே புயல் தாக்கியபோது மின்சாரம் இல்லை.
மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பலர் வருவாய் இழந்து தவித்தனர். அப்போது 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்று அறிவிக்க வேண்டியதுதானே. அப்போது ஏன் அவர் அறிவிக்கவில்லை.
குடும்ப அட்டை வைத்துள்ள அனைவருக்கும் இலவச செல்போன் என்று கூறியுள்ளார். இதுபோன்று தேர்தல் அறிக்கையில் இலவசங்களை ஜெயலலிதா அள்ளி விட்டிருக்கிறார். ஜெயலலிதாவின் இலவச அறிவிப்புகள் அனைத்தும், அவரது தோல்வி பயத்தை காட்டுகிறது.
தற்போது வீடுகளுக்கு யூனிட்டுக்கு 3 ரூபாயும், கடைகளுக்கு யூனிட்டுக்கு ரூ.7–ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. நாளை மின்கட்டணத்தை உயர்த்தினால், மின் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறோம் என்று அவர்கள் சொல்வார்களா? சொல்ல மாட்டார்கள்.
தி.மு.க.வும், அ.தி.மு. க.வும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் என்று அன்றே காமராஜர் சொன்னார். அப்போது அவர் சொன்னதை சிலர் கேலி செய்தனர். அவர் சொன்னது இப்போதுதான் மக்களுக்கு தெளிவாக தெரிகிறது.
இந்த சட்டமன்ற தேர்தலில் 6 தலைவர்கள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறோம். ஆறுமுகத்துக்கு என்றுமே ஏறு முகம்தான். தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளை நம்பாதீர்கள். இரு கட்சிகளும் ஊழல் கட்சிகள்தான். அவர்களை நீங்கள்தான் அகற்ற வேண்டும். அம்மா உப்பு, அம்மா உணவகம், அம்மா குடிநீர் என்று பல திட்டங்களுக்கு அம்மா பெயர் வைத்திருக்கிறார்களே. ஏன் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் பெயரை வைக்க வேண்டியது தானே. வைக்க மாட்டார்கள்.
தேர்தல் நேரத்தில் மட்டும் எம்.ஜி.ஆரின் பெயரை பயன்படுத்தி, ஜெயலலிதா ஆதாயம் பெறுகிறார். தேவைப்பட்டால் மட்டுமே புரட்சி தலைவரின் புகைப்படத்தையும், அவரது பெயரையும் பயன்படுத்துகிறார். இதையெல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். மே 16–ந் தேதி மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
இது தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் இடையே நடக்கின்ற போர். தர்மத்தின் பக்கம் உள்ளவர்கள் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.