மதுராந்தகம் பஸ் நிலையத்தில் பஸ்களை சிறை பிடித்து போராட்டம்
மதுராந்தகம்:
மதுராந்தகம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக் கணக்கானோர் தினசரி செங்கல்பட்டு, பெருங்களத்தூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்காக சென்று வருகின்றனர்.
தினமும் காலை நேரத்தில் மதுராந்தகம் பஸ் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டு, பெருங்களத்தூர் பகுதிக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பவுர்ணமியில் திருவண்ணாமலை, திருவக்கரை உள்ளிட்ட பகுதிகளுக்கு மதுராந்தகம் போக்குவரத்து பணி மனையில் உள்ள பஸ்கள் சிறப்பு பஸ்களாக மாற்றி இயக்கப்பட்டதால் வழக்கமாக செங்கல்பட்டு, பெருங்களத்தூருக்கு செல்லும் பஸ்கள் வராததால் பயணிகள் கடும் அவதிபட்டனர்.
இன்று அதிகாலை 4.30 மணிக்கு வழக்கமாக பல்வேறு இடங்களுக்கு செல்லும் பஸ்கள் மதுராந்தகம் பஸ் நிலையத்திற்கு வராததால் பயணிகள் ஆத்திரம் அடைந்தனர்.
இந்நிலையில் மதுராந்தகம் பணிமனையில் இருந்து ஊரின் பெயர் பலகையை மாற்றி வேறு இடத்திற்கு செல்வதற்காக 4 பஸ்கள் மதுராந்தகம் பஸ் நிலையத்திற்கு வந்தன. இதை பார்த்து ஆத்திரம் அடைந்த பயணிகள் 4 பஸ்களை சிறை பிடித்து போராட்டம் நடத்தினர்.
தொடர்ந்து தினசரி வழி தடத்தில் பஸ்களை இயக்க சொல்லி கோஷங்களை எழுப்பினர்.
இதை தொடர்ந்து பஸ்களின் நடத்துனர் போன் மூலம் போக்குவரத்து அதிகாரியிடம் தொடர்பு கொண்டு பேசினார். இதைத் தொடர்ந்து பஸ்கள் வழக்கமான வழி தடத்தில் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. பயணிகள் கலைந்து சென்றனர்.
இந்த போராட்டத்தால் மதுராந்தகத்தில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.