செய்திகள்

ஜெயலலிதாவை குறை கூறுவது சரியல்ல: வெங்கைய்யா நாயுடு பேட்டி

Published On 2016-04-19 13:48 IST   |   Update On 2016-04-19 13:48:00 IST
ஜெயலலிதாவை நேரில் சந்திக்க முடியவில்லை என்று சில மத்திய மந்திரிகள் குறை கூறுவது சரியல்ல என்று வெங்கைய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.
ஆலந்தூர்:

சென்னை வந்த மத்திய மந்திரி வெங்கைய்யா நாயுடு விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–

தமிழக சட்டசபை தேர்தலில் வேட்புமனு தாக்கல் இன்னும் தொடங்கவில்லை. பா.ஜனதா கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். இறுதி பட்டியல் வெளியிட்ட பிறகு பிரசாரத்துக்கு நான் வருவேன். அப்போது தமிழ்நாட்டு அரசியல் குறித்து பேசுவேன்.

முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை நேரில் சந்திக்க முடியவில்லை என்று சில மத்திய மந்திரிகள் கூறியுள்ளனர். தேர்தல் நேரத்தில் ஒருவர் மீது ஒருவர் குறை கூறுவது சகஜம். அந்த அமைச்சர் தனது துறை ரீதியாக சந்திக்க முடியவில்லை என்று தனது ஆதங்கத்தை தெரிவித்து இருக்கலாம். மத்திய–மாநில அமைச்சர்கள் மக்களுக்கு சேவை செய்யத்தான் இருக்கிறார்கள். எனவே ஒருவருக்கொருவர் குறை கூறுவது சரியல்ல.

தமிழ்நாட்டில் நடப்பது சட்டமன்ற தேர்தல். பாராளுமன்ற தேர்தல் அல்ல. பாராளுமன்ற தேர்தலில் தான் நாடு முழுவதும் மோடி அலை வீசியது.

இது சட்டசபை தேர்தல் மோடியும் போட்டியிடவில்லை. மோடி புகழ் இந்தியா மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் பரவி வருகிறது.

எதிர்க்கட்சிகளுக்கு மக்கள் மீது அக்கறை கிடையாது மக்கள் நலனை விட்டுவிட்டு ஆர்.எஸ்.எஸ்.சை எதிர்ப்பதுதான் அவர்களது நோக்கமாக இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். மக்களுக்கு எதிரான இயக்கம் அல்ல. மக்களுக்கு பல நன்மைகளை செய்து வருகிறது. அதனை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஊழயற்ற மக்களுக்கு நன்மையான ஆட்சி கொடுக்க வேண்டும் என்பதுதான் பிரதமர் மோடியின் திட்டம்.

காங்கிரஸ் மற்றும் இடது சாரிகள் தங்களை மதசார்பற்ற கட்சி என்று கூறி வருகிறது. ஆனால் அவர்கள் வன்முறைக்கும் பயங்கரவாதத்துக்கும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ், இடதுசாரி சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்து உள்ளது. ஆனால் கேரளாவில் எதிர் எதிர் அணியில் உள்ளது. இதனை மக்கள் நன்கு அறிவார்கள் கேரளாவில் பாரதீய ஜனதா வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News