செய்திகள்

நடிகை பிரீத்தி ஜெயினுக்கு ஜாமீன்: சிறைத்தண்டனை 4 வாரங்களுக்கு நிறுத்திவைப்பு

Published On 2017-04-28 21:06 IST   |   Update On 2017-04-28 21:06:00 IST
கொலை முயற்சி வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நடிகை பிரீத்தி ஜெயின், அப்பீல் செய்ய அவகாசம் அளிக்கும் வகையில் 4 வாரங்களுக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மும்பை:

பிரபல இந்திப்பட தயாரிப்பாளரும் இயக்குனருமான மதூர் பண்டார்கர் மீது நடிகை பிரீத்தி ஜெயின் கடந்த 2004ம் ஆண்டு கற்பழிப்பு புகார் கொடுத்தார். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், 2005-ம் ஆண்டு, இயக்குனர் மதூர் பண்டார்கரை கூலிப்படை ஏவி கொலை செய்ய முயன்ற வழக்கில் நடிகை பிரீத்தி ஜெயின், அவரது கூட்டாளிகள் நரேஷ் பர்தேஷி, ஷிவராம் தாஸ் மற்றும் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவ்வழக்கை விசாரித்த மும்பை அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இதில், இயக்குனர் மதூர் பண்டார்கரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியது நிரூபணமானதால், நடிகை பிரீத்தி ஜெயின் மற்றும் இரண்டு பேருக்கு மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 2 பேரும் விடுவிக்கப்பட்டனர்.

நீதிபதி தீர்ப்பு வாசித்த உடனேயே, தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி, பிரீத்தி ஜெயின் மனு தாக்கல் செய்தார். மேல்முறையீடு செய்யப்போவதாகவும் கூறினார். அவரது கோரிக்கையை ஏற்ற நீதிபதி, பிரீத்தி ஜெயினுக்கு ஜாமீன் வழங்கியதுடன், 4 வாரங்களுக்கு தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார். இதேபோல் மற்ற இருவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது.

Similar News