செய்திகள்

காட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் வெற்றி உறுதி: விஜயகாந்த் பேச்சு

Published On 2016-05-06 09:28 IST   |   Update On 2016-05-06 14:26:00 IST
காட்டுமன்னார் கோவில் தொகுதியில் திருமாவளவன் வெற்றி பெறுவது உறுதி, அவருக்கு மோதிரம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் என்று விஜயகாந்த் பேசினார்.
ஸ்ரீமுஷ்ணம்:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் தொகுதியில் உள்ள ஸ்ரீமுஷ்ணத்தில் தே.மு.தி.க.-மக்கள் நலக்கூட்டணி-த.மா.கா. தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் திருமாவளவன் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேசியதாவது:-

‘அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா தற்போது வெளியிட்டுள்ள கட்சியின் தேர்தல் அறிக்கையில் அனைவருக்கும் இலவச செல்போன் உள்ளிட்ட இலவச திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றுகிறார். அந்த போனை நீங்கள் டயல் செய்தால் கூட ‘அம்மா... அம்மா... என்றுதான் கேட்கும்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழலற்ற நல்லாட்சி தருவோம். ஏழை மக்களின் நல்வாழ்வுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவோம்.

எனவே நல்லாட்சி மலரவும், மக்களுக்கு உரிய அனைத்து உரிமைகளையும் பெற்றுத்தரவும் எங்களது கூட்டணிக்கு ஆதரவு அளித்து வெற்றி பெறச்செய்ய கேட்டுக்கொள்கிறேன்.

இப்போது நடைபெறும் தேர்தல் தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் இடையே நடக்கும் போராகும். இதில் தர்மம் நிச்சயம் வெல்லும். நமது கூட்டணி ஆட்சி வெல்லும்.

காட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டியிடுகிறார். அவர் எனது நீண்டகால நண்பர். எனது பிறந்த நாளின் போது வாழ்த்து தெரிவிப்பார். மக்கள் நல கூட்டணிக்கு நான் வர வேண்டும் என்று விரும்பி அழைத்தார்.

அவர் காட்டுமன்னார் கோவில் தொகுதியில் வெற்றி பெறுவது உறுதி. அவருக்கு மோதிரம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்.

இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

அதன் பின்னர் தனது கையில் அணிந்திருந்த மோதிரத்தை காட்டி இந்த சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று வாக்காளர்களிடம் கேட்டுக் கொண்டார்.

கூட்டத்தில் திருமாவளவன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News