செய்திகள்

விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்: தர்மபுரியில் ஜெயலலிதா பிரச்சாரம்

Published On 2016-04-13 15:39 IST   |   Update On 2016-04-13 15:39:00 IST
விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்துள்ளார்.
தர்மபுரி:

தர்மபுரியில் இன்று நடந்த அ.தி.மு.க. பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா கலந்துகொண்டு 11 வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து உரையாற்றினார். அப்போது அ.தி.மு.க. அரசின் செயல்பாடுகள் மற்றும் நிறைவேற்றப்பட்ட நலத்திட்டங்களை விளக்கி வாக்கு கேட்டார். அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் எனது தலைமையிலான அரசு எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி உள்ளது. மக்களுக்குத் தேவையான அனைத்து திட்டங்களையும் யோசித்து யோசித்து செயல்படுத்தி வருகிறேன். சொன்ன திட்டங்களையும் சொல்லாத திட்டங்களையும் நிறைவேற்றி உள்ளேன்.

வாழ்க்கைத் தரத்தில் பின்தங்கி உள்ளோருக்கு கல்வி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளேன். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற கொள்கையோடு இந்த அரசு செயல்படுகிறது. எனவே, அ.தி.மு.க. ஆட்சி தொடர வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும்.

ஒகேனக்கல் கூட்டக் குடிநீர் திட்டம் எனது முந்தைய ஆட்சியின்போது கொண்டு வரப்பட்டது. இதன்மூலம் 32 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயன்பெற்று வருகின்றனர். ஆனால், இந்த திட்டத்தை பேரவைக்கு தெரியமலேயே கருணாநிதி ஒத்திவைத்தார்.

விவசாய நிலங்கள் வழியாக கெயில் நிறுவனம் எரிவாயு குழாய் பதிக்கக்கூடாது என நான் வலியுறுத்தினேன். மேலும், கெயில் எரிவாயு திட்டத்திற்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மதுவிலக்கு குறித்து பேசுவதற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு தகுதியில்லை. நான் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் தமிழகத்தில் படிப்படியாக மது விலக்கு அமல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Similar News