செய்திகள்

ஜெயலலிதா இன்று விருத்தாசலத்தில் தேர்தல் பிரசாரம்: 13 அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்

Published On 2016-04-11 07:22 IST   |   Update On 2016-04-11 07:59:00 IST
முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று விருத்தாசலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு, 13 அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.
சென்னை:

சட்டமன்ற தேர்தல் மே 16-ந் தேதி நடைபெறவுள்ள நிலையில், அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா நேற்று முன்தினம் சென்னையில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். தீவுத்திடலில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் அவர் 20 அ.தி.மு.க. வேட்பாளர்களை அறிமுகம் செய்து பேசினார்.

இந்த நிலையில், 2-வது நாளாக இன்று (திங்கட்கிழமை) கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பங்கேற்று பேசுகிறார். இதற்காக அவர் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து மதியம் ஒரு மணிக்கு புறப்படுகிறார்.

காரில் சென்னை நேப்பியர் பாலம் அருகே உள்ள ஐ.என்.எஸ். அடையார் வரும் ஜெயலலிதா, அங்கிருந்து ஹெலிகாப்டரில் விருத்தாசலம் நோக்கி புறப்படுகிறார். அங்கு ஜெயங்கொண்டம் நெடுஞ்சாலை கருவேப்பிலைகுறிச்சியில் உள்ள மைதானத்தில் ஹெலிகாப்டர் இறங்குவதற்காக ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது. அதில் மதியம் 2 மணிக்கு வந்து ஹெலிகாப்டரில் இறங்கும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அங்கிருந்து விருத்தாசலத்திற்கு காரில் செல்கிறார். அங்கு அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட மேடையில் விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, கடலூர், குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், பெரம்பலூர், குன்னம், அரியலூர், ஜெயங்கொண்டம், திட்டக்குடி ஆகிய 13 தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசுகிறார்.

பின்னர், 3.15 மணிக்கு அங்கிருந்து புறப்படும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஹெலிகாப்டர் மூலம் சென்னை திரும்புகிறார். ஜெயலலிதா வருகையையொட்டி, விருத்தாசலத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Similar News