செய்திகள்

ஊழல் கட்சிகளை வீட்டுக்கு அனுப்பி விட்டு தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்: ஜி.கே.வாசன் பிரசாரம்

Published On 2016-05-09 11:00 IST   |   Update On 2016-05-09 11:00:00 IST
ஊழல் கட்சிகளை வீட்டுக்கு அனுப்பி விட்டு தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தேர்தல் பிரசாரத்தில கூறியுள்ளார்.
கடலூர்:

கடலூர் சட்டசபை தொகுதியில் தே.மு.தி.க., மக்கள் நலக்கூட்டணி, த.மா.கா. கூட்டணி வேட்பாளர் வக்கீல் சந்திரசேகரனை ஆதரித்து த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் திறந்த ஜீப்பில் நின்றபடி வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:–

மக்களிடம் நல்ல எழுச்சி ஏற்பட்டுள்ளது. கடலூர் சட்டசபை தொகுதியில் த.மா.கா. சார்பில் போட்டியிடும் வேட்பாளரை வெற்றி பெற செய்ய கடினமாக உழைக்க வேண்டும். தேர்தல் முடியும் வரை இந்த உழைப்பு தொடர வேண்டும். அப்போது தான் புதிய ஆட்சி அமையும். கேப்டன் விஜயகாந்த் தலைமையில் நல்லாட்சி ஏற்படும்.

50 ஆண்டுகள் அ.தி.மு.க., தி.மு.க. என்று மாறி, மாறி இரு கட்சிகளும் ஆட்சியில் இருந்துள்ளது. ஆனால் இது வரை 3–வது அணி தலைவர்கள் என்று யாரும் இதுவரை வரவில்லை. இதற்கு மக்களை குறைகூற மாட்டேன். அரசியல் கட்சி தலைவர்கள் தான் காரணம்.

50 ஆண்டுகளுக்கு பிறகு பலமான, வலுவான கூட்டணி உருவாகி இருக்கிறது. மக்கள் விரும்புகிற, எதிர்பார்த்த கூட்டணி நம்பிக்கை அடிப்படையில் உருவாகி இருக்கிறது.

ஆகவே நாம் கடமையை முழுமையாக செய்ய வேண்டும். தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அ.தி.மு.க., தி.மு.க., ஊழல் கட்சிகளை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இந்த கடமையில் இருந்து நாம் தவறி விடக்கூடாது. நல்ல மாற்றம் ஏற்பட வேண்டும். அதாவது மனமாற்றம் தேவை.

மனமாற்றம் இருந்தால் தான் ஆட்சி மாற்றம் ஏற்படும். நல்லாட்சி, மக்கள் விரும்புகிற கூட்டு ஆட்சி, கேப்டன் விஜயகாந்த் தலைமையில் நல்லாட்சி அமையும்.

50 ஆண்டுகால திராவிட ஆட்சியில் நகரங்கள், கிராமப்புறங்களில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. கடலூரில் பாதாள சாக்கடை திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. இந்த நிலை மாற வேண்டும். மக்களின் அடிப்படை வசதிகளை 100 சதவீதம் நமது வேட்பாளர் வெற்றி பெற்றவுடன் செய்து தருவார்.

தே.மு.தி.க., மக்கள் நலக்கூட்டணி, த.மா.கா. நாளை ஆளப்போகும் கட்சி. அ.தி.மு.க., தி.மு.க.வின் பணபலம், ஆட்சி பலம், அதிகார பலத்தை தாண்டி நம்மிடம் மக்கள் பலம் உள்ளது. ஆகவே நாம் வெற்றி பெறுவோம்.

இவ்வாறு ஜி.கே.வாசன் பேசினார்.

Similar News