செய்திகள்

கரூரில் சிக்கிய பணத்தை உளவு துறையும் தேர்தல் கமிஷனும் மூடி மறைக்கிறது: மு.க.ஸ்டாலின் பேட்டி

Published On 2016-04-24 16:58 IST   |   Update On 2016-04-24 16:58:00 IST
கரூரில் முக்கிய பிரமுகர் ஒருவரின் குடோனில் கோடிக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதை தேர்தல் கமிஷன் மூடி மறைக்க பார்க்கிறது என்று ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

ஆலந்தூர்:

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் மதுரை செல்லும் வழியில் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–

தமிழகத்தில் தேர்தல் ஆணையம் மெதுவாக செயல்படுகிறது. கரூரில் முக்கிய பிரமுகர் ஒருவரின் குடோனில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த விஷயத்தை அரசு அதிகாரிகள், தலைமை செயலாளர், ஆகியோர் மூடி மறைக்க முயலுகின்றனர்.

இந்த விவகாரத்தில் எதையும் கண்டுகொள்ளாமல் தேர்தல் கமிஷன் இருப்பது வேதனை அளிக்கிறது. தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக உளவுத்துறை செயல்படுகிறது. தேர்தல் ஆணையத்துடன் உளவுத்துறையும் இணைந்து இவ்வாறு செயல்படுகிறது.

காவல் துறையில் சில அதிகாரிகளும், அதற்கு பக்க பலமாக தேர்தல் கமிஷன் அதிகாரிகளும் செயல்படுகிறார்கள். இதற்கெல்லாம் பதில் சொல்லும் காலம் வரும்.

தவறு செய்பவர்கள் மீது தேர்தலுக்கு பிறகு ஆட்சி அமைந்ததும் கலைஞர் நடவடிக்கை எடுப்பார்.

தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியை அகற்ற மக்கள் முடிவு செய்துவிட்டனர். தி.மு.க. வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

நான் 27–ந்தேதி கொளத்தூர் தொகுதியில் மனு தாக்கல் செய்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News