கதம்பம்
மரம்

அன்றாட வாழ்வின் உளவியல்- டாக்டர் ஜி. ராமானுஜம்

Published On 2022-05-25 11:06 GMT   |   Update On 2022-05-25 11:06 GMT
ஒரு மரம் செடியாக இருக்கும் போது பார்த்துவிட்டுப் பத்து வருடங்கள் கழித்துப் பார்த்தால் அதன் வளர்ச்சி பிரமிக்க வைக்கும். அதுவே அந்த மரத்தைத் தினமும் பார்ப்பவர்களுக்குத் தெரியாது.
உளவியலில் கவனிக்கத்தக்க வித்தியாசம் என்று ஒரு விஷயம் சொல்வார்கள். அதாவது ஒரு பொருளின் அளவு அல்லது விலை மாறியிருப்பதை நம்மால் உணர முடியும் மாற்றம்.

உதாரணத்திற்கு பெட்ரோல் விலையைத் திடீரென ஒரே நாளில் இருபது ரூபாய் கூட்டினால் நமக்குச் சட்டென்று தெரியும். ஆனால் தினமும் பத்து பைசாவாகக் கூட்டினால் மெதுவாக 200 நாட்களில் இருபது ரூபாய் கூடியிருக்கும். அதை நாம் உணரவே மாட்டோம். இதில் முக்கிய விஷயம், ஒரிஜினல் அளவிலிருந்து எவ்வளவு சதவிகிதம் கூடியிருக்கிறது என்பதுதான்  முக்கியம்.  

அதாவது பதினைந்து ரூபாய் டீ திடீரென இருபது ரூபாய் ஆனால் நமக்கு வித்தியாசம் தெரியும். ஏனெனில் ஒரிஜினலைவிட 33% க்கும் மேல் கூடியுள்ளது. இது ஐந்து ரூபாய்தான். ஆனால் அதுவே பத்து லட்சம் மதிப்புள்ள காரின் விலை ஐயாயிரம் ரூபாய் கூடினாலும் நமக்குத் தெரியாது. ஏனெனில் அது ஒரிஜினலைவிட அரை சதவிகிதம்தான். அதுவே ஐம்பதாயிரம் அல்லது ஒரு லட்ச ரூபாய் கூடினால்தான் நம் கவனத்தை ஈர்க்கும்.

இன்னொரு விஷயம்!  தினமும் அளவு பார்த்துக் கொண்டே இருந்தால் மாறுதல் நம் கண்களுக்குத் தெரியாது. ஒரு மரம் செடியாக இருக்கும் போது பார்த்துவிட்டுப் பத்து வருடங்கள் கழித்துப் பார்த்தால் அதன் வளர்ச்சி பிரமிக்க வைக்கும். அதுவே அந்த மரத்தைத் தினமும் பார்ப்பவர்களுக்குத் தெரியாது.

உடல் எடை கூடுவதும் அப்படியே. கொஞ்சம் கொஞ்சமாகக் கூடுவதை நம்மால் உணர முடியாது. பெரும்பாலும் மாதம் அரைக்கிலோ, முக்கால் கிலோ கூடும். ஆனால் இரண்டு வருடங்களில் 12 -15 கிலோ கூடியிருக்கும். அதே போல் வெற்றிகளும் உடனே வெளியே தெரியாது.

உடல் எடைக்குறைப்பாக இருக்கட்டும், ஓர் இசைக்கருவி வாசிப்பதாக இருக்கட்டும், முதலீடாக இருக்கட்டும், மெதுவாகவே முன்னேற்றம் கண்ணுக்குத் தெரியாத வகையில் இருக்கும். முன்னேற்றம் இல்லை எனக் கைவிட்டுவிடக் கூடாது. இந்த கவனிக்கத்தக்க வித்தியாசத்துக்கும் கீழே இருக்கும் மாறுதல்களை உணர நீங்கள் மாற்ற விரும்புவதை அடிக்கடி தொடர்ந்து  அளவிட்டு ஆவணப்படுத்திக் கொண்டே இருங்கள். சேமிப்போ, உடல் எடையோ...சில வருடங்கள் கழித்து பழைய மதிப்பீடுகளைப் பார்த்து ஒப்பிடும்போதுதான் உங்கள் முன்னேற்றம் கண்ணுக்குத் தென்படும். மேலும் முன்னேற உந்துதலாக இருக்கும்.

ஆகவே ஆவணப் படுத்துங்கள். அளவிடுங்கள். எடை பார்க்கும் கருவி வாங்கி எடை பார்க்காமல் எடையைக் குறைக்கவே முடியாது. எனக்குப் பிடித்த வாசகம் ‘உங்களால் அளவிட முடியாததை மாற்ற முடியாது’. அளக்க முடியாத விஷயத்தை உங்களால் மாற்ற இயலாது.
Tags:    

Similar News

தம்பிடி