மத்திய தொழில் பாதுகாப்பு படையின் கீழ் கர்நாடக அணைகளை கொண்டு வர வேண்டும் - பி.ஆர்.பாண்டியன்
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில், தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், நிரூபர்களுக்கு பேட்டியளித்தார்.
காவிரி மேலாண்மை ஆணைய முதல் கூட்டத்திலேயே ஜூலை மாதத்திற்கு 31.24 டி.எம்.சி தண்ணீரை தமிழகத்திற்கு கர்நாடக மாநிலம் திறந்து விட உத்தரவிட்டதை பாராட்டுகிறோம். இதனால் இந்த ஆண்டு ஒரு போக சம்பா சாகுபடியாவது மேற்கொள்ள முடியும் என நம்புகிறோம்.
ஆணையத்தின் இந்த உத்தரவை காவிரி நீர் பங்கீட்டு ஒழுங்காற்று குழு உடன் நிறைவேற்ற வேண்டும். கர்நாடகாவில் உள்ள அணைகளின் தண்ணீரை அன்றாடம் கணக்கிட்டு பகிர்ந்தளிக்கும் நிர்வாக அதிகாரத்தை ஆணையம் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும்.
சுப்ரீம் கோர்ட்டுக்கு இணையான ஆணைய உத்தரவை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் உதவிட வேண்டும். இதை யார் மீறினாலும் கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக மத்திய தொழில் பாதுகாப்பு படை பாதுகாப்பின் கீழ் கர்நாடக அணைகளை கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.