செய்திகள்

கமல்-கெஜ்ரிவால் சந்திப்பில் ஒன்றும் இல்லை: அமைச்சர் ஜெயக்குமார்

Published On 2017-09-22 11:38 IST   |   Update On 2017-09-22 12:47:00 IST
கமல்ஹாசனை, கெஜ்ரிவால் சந்தித்து இருப்பது இயல்பான ஒன்றுதான் எனவும் இந்த சந்திப்பில் ஒன்றும் இல்லை எனவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
ஆலந்தூர்:

அமைச்சர்கள் டி.ஜெயக் குமார், சி.வி.சண்முகம், உதயகுமார் ஆகியோர் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றனர். முன்னதாக அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

பொதுக்குழு கூடி முடிவு எடுத்ததின்படி தொடர் நடவடிக்கையாக டெல்லி செல்கிறோம். கழக சட்ட விதிகளின் படி 5-ல் ஒரு பங்கு உறுப்பினர்கள் இருந்தால் பொதுக்குழுவை நடத்தலாம். 98 சதவீத உறுப்பினர்கள் பொதுக்குழுவில் பங்கேற்று உள்ளனர். எல்லோரும் ஒற்றுமையாக இருக்கிறோம்.

பொதுக்குழுவில் பல தீர்மானங்களை இயற்றி உள்ளோம். அதில் உறுப்பினர்களிடம் கையெழுத்தை பெற்று வீடியோ பதிவு செய்து இருக்கிறோம்.

இப்படி இருக்கும்போது பொதுக்குழு உறுப்பினரே இல்லாதவர்கள், பொதுக் குழுவை கூட்டுவோம் என்று சொல்வது காற்றில் கத்தியை வீசுவது போல் உள்ளது.

அ.தி.மு.க.வில் நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு இருக்கிறோம். இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுப்போம். எங்களுக்கே இரட்டை இலை சின்னம்.

கமல்ஹாசன்-கெஜ்ரிவால் சந்திப்பு என்பது, ஒருவரை ஒருவர் சந்திப்பது. கமல்ஹாசனை, கெஜ்ரிவால் சந்தித்து இருப்பது இயல்பான ஒன்றுதான். அதில் அவர்கள் அரசியல் பேசி இருந்தால் பெரிய அளவில் இருக்காது. என்னைப் பொறுத்தவரை இந்த சந்திப்பில் ஒன்றும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News