வருமானவரித்துறை பா.ஜனதாவின் கிளை அமைப்பாக மாறியிருக்கிறது: தமீம் அன்சாரி எம்.எல்.ஏ. பேட்டி
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் வக்பு வாரிய இட ஆக்கிரமிப்பு சம்பந்தமாக கேட்டறிய மனித நேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளரும், நாகை தொகுதி எம்.எல்.ஏ.வுமான தமீம் அன்சாரி அந்தியூர் வந்தார்.
இட ஆக்கிரமிப்பு சம்பந்த மாக சுமூகமாக பேசி தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சி ஜனநாயகத்தை சீர் குழைத்து வருகிறது.
பாரதிய ஜனதா கட்சி தவிர இந்தியாவில் எந்த கட்சிகளும் ஜனநாயக சுதந்திரத்தோடு செயல்படக்கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு எல்லா கட்சி தலைவர்கள் மீதும் வழக்குகளை பாய்ச்சுகிறார்கள்.
எதிராக பேசுபவர்கள் மீது பலி வாங்கும் போக்கோடு கட்சி தலைமை செயல்பட்டு கொண்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சி இதனை முறியடிக்க வேண்டும்.
ராகுல்காந்தி முழு நேர அரசியலுக்கு வந்து ஜனசக்தி, மதசார்பற்ற சக்தி, சமூக நீதி சக்தி, இடதுசாரிகள் என அனைவரையும் ஒருங்கிணைத்து பாரதீய ஜனதாவுக்கு எதிராக ஜனநாயக போரை அறிவிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் அ.தி.மு.க. வின் பிளவிற்கும், இரு அணிகள் சேராதிருப்பதற்கும் பாரதிய ஜனதா கட்சியின் கைங்கரியம் தான் மூலக்காரணம் ஆகும்.
பெங்களூருவில் இருக்கும் குஜராத் மாநில காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசுக்கு வாக்களிக்கக் கூடாது என்பதற்காக வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டுள்ளது.
எனவே மத்திய வருமான வரித்துறை பாரதீய ஜனதா கட்சியின் கிளை அமைப்பாக மாறியிருக்கிறது என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
எதிர் காலத்தில் இந்தியாவில் ரேசன் பொருட்களை நிறுத்துவதற்கான முன்னேற்பாடாக மத்திய அரசு தற்போது செயல்படுகிறது. ரேசன் பொருட்கள் மீதுள்ள கெடுபிடிகளை திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். அப்போது துணை பொது செயலாளர் பாபு ஷாகின்ஷா, மாவட்ட செயலாளர் ஷாநவாஸ், கோவை மாவட்ட செயலாளர் அப்பாஸ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.