செய்திகள்

புதுவையில் விதிமுறைகளுக்குட்பட்டு தான் நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்: பொன்.ராதாகிருஷ்ணன்

Published On 2017-07-14 09:27 IST   |   Update On 2017-07-14 09:27:00 IST
புதுச்சேரியில் விதிமுறைகளுக்குட்பட்டு தான் நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
நெல்லிக்குப்பம்:

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தை அடுத்த அழகியநத்தம் கிராமத்தில் பா.ஜனதா கட்சி சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான படிவங்களை வழங்கினார்.

தமிழகத்தில் பா.ஜனதா கட்சி மிக வேகமாக வளர்ந்து வருகிறது. மோடியின் 3 ஆண்டு சாதனைகள் கிராமங்கள் தோறும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்தியில் ஊழலற்ற ஆட்சி, நேர்மையான ஆட்சி நடக்கிறது.

தமிழகத்தில் லஞ்சம் பெருகி விட்டது என்று நடிகர் கமல்ஹாசன் கூறியதற்கு பாராட்டு தெரிவித்துக்கொள்கிறேன். கிராம மக்களிடையே ஊழல், லஞ்சம் பற்றிய விழிப்புணர்வு வந்து விட்டது. இலவசங்கள் ஒரு வகையில் லஞ்சம் என்பதை மக்கள் புரிந்து உள்ளனர்.

மத்திய அரசு எக்காரணத்தை கொண்டும் அ.தி.மு.க. ஆட்சியையோ, அதிகாரத்தையோ பறிப்பதற்கு தயாராக இல்லை. ஆனால் மாறாக ஒரு கட்சி என்கிற முறையில் பா.ஜ.க. தமிழகத்தில் உள்ள கட்சிகளை மிஞ்சி வருவதற்கு நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். அதில் வெற்றி பெற்று வருகிறோம்.



புதுச்சேரியில் நியமன எம்.எல்.ஏ.க்களை மத்திய அரசின் ஆலோசனை பெற்றே நியமிக்க வேண்டும். அதுதான் நடந்து உள்ளது. மேலும் விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதனை மதிக்க வேண்டும் என்பது மாநில அரசின் கடமை. மேலும் மாநில அரசு தான் நியமன உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் என்றால் எதற்காக நியமன உறுப்பினர்களை நியமிக்க காலதாமதம் செய்தார்கள்? அதில் மத்திய அரசின் ஆலோசனை பெற்று தான் நடக்க வேண்டும்.

இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Similar News