செய்திகள்

உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக தேர்தல் அதிகாரியாக பழனியப்பன் நியமனம்?

Published On 2017-04-06 11:17 IST   |   Update On 2017-04-06 11:17:00 IST
உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக தேர்தல் அதிகாரியாக பழனியப்பன் இப்பதவியில் நியமிக்கப்படலாம் என தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னை:

தமிழகத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவிக்காலம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முடிந்தது. தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டது.

தேர்தல் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து வந்த நிலையில் தி.மு.க சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கால் உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போனது.

பழங்குடி இனத்தவருக்கு முறையான இட ஒதுக்கீடு பின்பற்றப்படாததால் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. பின்னர் மே 14-ந் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தாவிட்டால் நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாக நேரிடும் என்று ஐகோர்ட்டு எச்சரித்துள்ளது.

இந்த நிலையில் மாநில தேர்தல் ஆணையராக கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் 22-ந் தேதி நியமிக்கப்பட்ட பெ. சீத்தாராமனின் பதவிக்காலம் கடந்த மார்ச் 22-ந் தேதியுடன் முடிந்தது. இதையடுத்து அவர் தனது பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு சென்றார்.

மாநில தேர்தல் ஆணையத்தில் புதிய தேர்தல் ஆணையரை நியமித்து தேர்தலை நடத்த வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டுள்ளது.

மாநில தேர்தல் ஆணையர் 2 ஆண்டுகள் பதவியில் நீடிப்பார்கள். பெரும்பாலும் அனுபவமிக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இப்பதவிக்கு நியமிக்கப்படுவார்கள்.

அந்த வகையில் பொதுப் பணித்துறை செயலாளராக இருந்து கடந்த ஆண்டு ஓய்வு பெற்ற என்.எஸ். பழனியப்பன் இப்பதவியில் நியமிக்கப்படலாம் என தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொதுப்பணித்துறை, சமூக நலத்துறை, ஊரக வளர்ச்சி, தொழில், எரிசக்தி உள்ளிட்ட துறைகளின் செயலாளராக இவர் பணியாற்றியுள்ளார்.

என்.எஸ். பழனியப்பனிடம் தமிழக அரசு சார்பில் பேசப்பட்டு வருவதாகவும் ஆர்.கே.நகர் தேர்தல் முடிந்ததும் நியமனம் செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

Similar News