செய்திகள்

ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியா? ஜி.கே.வாசன் பேட்டி

Published On 2017-03-20 13:20 IST   |   Update On 2017-03-20 13:20:00 IST
ஆர்.கே. நகர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து நாளை (செவ்வாய்க்கிழமை) முடிவு அறிவிக்கப்படும் என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
ஈரோடு:

ஈரோடு மாவட்டம் கோபியில் த.மா.கா. வடக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடந்தது.

இதில் கலந்துகொண்ட கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆர்.கே. நகர் இடை தேர்தலில் த.மா.கா. போட்டியிடுவது குறித்து தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. ஆர்.கே. நகர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து நாளை (செவ்வாய்க்கிழமை) முடிவு அறிவிக்கப்படும்.

இன்று முதல் 3 வாரம் தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களுக்கு சென்று கட்சி தொண்டர்களை சந்தித்து கட்சியை மேலும் வலிமைபடுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன்.


தமிழ்நாட்டில் விவசாயிகளின் நிலை மிக பரிதாப மாக உள்ளது. கேளா, கர்நாடகா, ஆந்திரா என சுற்றி உள்ள மாநிலங்களில் ஆறுகளில் தடுப்பணைகள் கட்டி வருகிறார்கள். இதனால் தமிழகம் பாலை வானம் ஆகும் சூழ்நிலை உள்ளது.

கேரளா அரசு பவானி ஆற்றில் 6 தடுப்பணைகள் கட்டி வருகிறது. இதில் 2 அணைகள் கட்டிமுடிக்கப்பட்டு விட்டது. இன்னும் 4 அணைகளை கட்ட தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதை மத்திய-மாநில அரசுகள் கவனத்தில் கொண்டு வந்து அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக அரசு அத்திக் கடவு- அவினாசி திட்டத்துக்கு ரூ.250 கோடி ஒதுக்கி உள்ளது. இந்த நிதி போதாது. திட்டத்தை நிறைவேற்ற ரூ.6352 கோடி தேவைப்படுகிறது.

இதனால் அத்திக்கடவு- அவினாசி திட்டத்துக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும்.

இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.

Similar News