செய்திகள்

கனகராஜ் எம்.எல்.ஏ. அணி மாற மாட்டார்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

Published On 2017-03-19 16:08 IST   |   Update On 2017-03-19 16:08:00 IST
சூலூர் எம்.எல்.ஏ. கனகராஜ் அணி மாற மாட்டார். எங்களுடன் தான் இருக்கிறார் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

கொடுமுடி:

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள கொம்பணைப்புதூர் அம்மன் திருமண மண்டபத்தில் இன்று மதியம் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் விவசாய கருத்தரங்கு நடந்தது. கருத்தரங்குக்கு மாவட்ட வருவாய் அதிகாரி சதீஸ் தலைமை தாங்கினார்.

இந்த கருத்தரங்கில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

விழாவில் கலந்து கொண்டு திரும்பிய அமைச்சர் செங்கோட்டையனிடம் நிருபர்கள் கோவை மாவட்டம் சூலூர் எம்.எல்.ஏ. கனகராஜ், “நான் ஓ.பி.எஸ்.அணிக்கு மாற போவதாக கூறியுள்ளாரே?” என்று கேட்டபோது, அதற்கு செங்கோட்டையன் கூறியதாவது:-

சூலூர் எம்.எல்.ஏ. கனகராஜ் கல்குவாரியில் நடந்துள்ள ஊழலை தான் விசாரிக்க கூறியுள்ளார். அதுகுறித்து விசாரணை நடத்தப்படும். அவர் அணி மாற மாட்டார். எங்களுடன் தான் இருப்பார். இது தவறான தகவல்.


ஆர்.கே.நகர் தொகுதியில் சின்னம்மா சசிகலா ஆசியுடன் துணைப்பொதுச் செயலாளர் தினகரன் போட்டியிடுகிறார். அவர் நிச்சயமாக அதிக வாக்கு வித்தியாசத்தில் அமோகமாக வெற்றி பெறுவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கருத்தரங்கில் அமைச்சர் செங்கோட்டையன் பேசிவிட்டு சென்ற பிறகு அதிகாரிகளை விவசாயிகள் திடீரென்று முற்றுகையிட்டனர்.

“இந்த கருத்தரங்கில் விவசாயிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. விவசாயிகளை மேடையில் ஏற அனுமதிக்கவும் இல்லை. இந்த நிகழ்ச்சி விவசாயிகள் நிகழ்ச்சியாக தெரியவில்லை. அரசியல் நிகழ்ச்சியாக தான் தெரிந்தது” என்று கூறினர்.

இதை தொடர்ந்து விவசாயிகளை அதிகாரிகள் சமரசம் செய்தனர்.

Similar News