செய்திகள்

பயிர் கருகியதால் விவசாயிகள் இறந்ததாக கூறுவதா?: அமைச்சர் சம்பத் குற்றச்சாட்டு

Published On 2017-01-07 11:12 IST   |   Update On 2017-01-07 11:12:00 IST
பயிர் கருகியதால் விவசாயிகள் இறந்ததாக எதிர்க்கட்சியினர் தவறான தகவலை பரப்புகிறார்கள் என்று அமைச்சர் சம்பத் குற்றம்சாட்டியுள்ளார்.
சிதம்பரம்:

தமிழகத்தில் பருவமழை பெய்யாததால் நெல் மற்றும் விவசாய பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.

வாடிய பயிரைக் கண்டு விவசாயிகள் தற்கொலை செய்வதும், சுருண்டு விழுந்து சாவதும் நடந்து வருகிறது.

இந்த நிலையில் வறட்சியால் பாதித்த பகுதிகளை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் தமிழகம் முழுவதும் சென்று நேற்று பார்வையிட்டனர்.

கடலூர் மாவட்டத்தில் டெல்டாவின் கடைசி பகுதியான சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார் கோவில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங்பேடி ஆகியோர் பார்வையிட்டனர்.

அப்போது விவசாயிகள் அவர்களிடம் கருகிய பயிர்களை காட்டி நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

ஆய்வுக்குப் பின்னர் மேலமூங்கிலடி பகுதியில் அமைச்சர் சம்பத் நிருபர்களிடம் கூறும்போது, விவசாயிகள் உயிரிழப்பு குறித்து எதிர்க்கட்சியினர் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். இது அ.தி.மு.க. ஆட்சிக்கு எதிரான செயலாகும்.

கடலூர் மாவட்ட விவசாயிகள் அனைவரும் தன்னம்பிக்கைமிக்கவர்கள். ஒரு ஆண்டு விவசாயம் பொய்த்தாலும் அடுத்த ஆண்டு விளைந்துவிடும் என்ற நம்பிக்கை உள்ளவர்கள்.

தமிழகம் முழுவதும் விவசாயிகள் இறப்பு என்பது பொய்யான, தவறான தகவல். சிலர் வயது முதிர்வு, பல்வேறு நோய்கள், உடல் உபாதைகளால் இறந்திருக்கலாம் என்றார்.

அமைச்சர் எம்.சி. சம்பத்தின் இந்த பேச்சுக்கு விவசாயிகளும், பல்வேறு விவசாய சங்கங்களும் கண்டனம் தெரிவித்துள்ளன.

Similar News