செய்திகள்

500, 1000 ரூபாய் செல்லாது என அறிவித்ததால் பொதுமக்கள் பாதிப்பு: திருநாவுக்கரசர்

Published On 2016-11-12 17:40 IST   |   Update On 2016-11-14 15:20:00 IST
500, 1000 ரூபாய் செல்லாது என அறிவித்ததால் பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று திருநாவுக்கரசர் பேட்டியில் கூறியுள்ளார்.

கடலூர்:

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னையில் இருந்து அரவக்குறிச்சிக்கு தேர்தல் பிரசாரம் செய்வதற்காக செல்லும் வழியில் கடலூருக்கு வந்தார்.

அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பிரதமர் மோடி பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் இல்லத்தரசிகள், உழைப்பாளிகள் மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் அவதிபடுகின்றனர்.

இது அவசர கோலத்தில் அறிவித்த அறிவிப்பாகும். பொதுமக்கள் வங்கி மற்றும் ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுப்பதற்காக வெயிலில் காத்து நிற்கிறார்கள். இதை பார்க்கும்போது மனதுக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது.

பல வங்கிகளில் பணம் மாற்றுவதற்கு பயன்படுத்தும் விண்ணப்பம் ஆங்கிலத்தில்தான் உள்ளது. இதை கிராம மக்கள், பாமர மக்கள் எப்படி நிரப்பி பணம் பெறுவார்கள்?

மேலும் அந்தந்த மாநிலத்தில் உள்ள மொழிகளிலேயே விண்ணப்பம் இருக்க வேண்டும்.

பொதுமக்கள் தங்கள் இல்லங்களில் வைத்திருந்த நிகழ்ச்சிகளை பழைய 500, 1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் பல சிரமங்களுக்கிடையில் நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.

ரூபாய் நோட்டு நிலமைகள் 2 மாதங்களில் சரியாகும் என்று மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம் வர வேற்கத்தக்கதுதான். இருந்தாலும் மக்கள் சிரமத்தை தவிர்த்து இந்த திட்டத்தை செயல்படுத்தி இருக்க வேண்டும்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்பது பா.ஜ.க.வினருக்கு 3 மாதத்துக்கு முன்பே தெரியும் என்று கூறியுள்ளார். இதை நம் கருத்தில் கொள்ள வேண்டும். ஏனென்றால் அவர் மாநிலத்தின் முதல்வர்.

முன்னாள் நிதி மந்திரி சிதம்பரம் புதிய ரூபாய் நோட்டுக்கள் அச்சடிப்பதற்கு 20 ஆயிரம் கோடி செலவாகும் என்று கூறியுள்ளார். இதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நிதி நெருக்கடியில் தமிழக அரசு உள்ளதா? என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி கேட்டுள்ளனர். நீதிமன்ற அடிப்படை செலவுகள் மற்றும் அடிப்படை வசதிக்கு நிதித்துறை பணம் வழங்கவில்லை. இதற்கானத்தான் நீதிபதிகள் இந்த கேள்வியை கேட்டனர். இதனால் தமிழக அரசு உடனடியாக நீதிமன்றத்துக்கு பணம் ஒதுக்க வேண்டும்.

மத்திய அரசு கொண்டு வந்த உணவு பாதுகாப்பு சட்டம், இ.எஸ்.டி. திட்டம், உதய் திட்டம் போன்றவற்றை ஜெயலலிதா முன்பு எதிர்த்தார். தற்போது நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் உள்ள தமிழக அரசு இந்த திட்டத்தை அனுமதித்துள்ளார்கள். இது ஏன்?

மத்திய அரசு தமிழக அரசுக்கு பல நெருக்கடிகளை கொடுத்து பல திட்டங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. மத்திய அரசு திணிக்கும் திட்டத்தை தமிழக மக்களுக்கு பயன்படும் திட்டமா? என்பதை பார்த்து அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

புதுவை மாநிலம் நெல்லிக்குப்பம் தொகுதியில் போட்டியிடும் நாராயணசாமி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.

தமிழகத்தில் நடைபெறும் இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும்.

இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.

Similar News