செய்திகள்

அரவக்குறிச்சி தொகுதியில் 18–ந் தேதி தேர்தல் நடத்த வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்

Published On 2016-05-15 16:19 IST   |   Update On 2016-05-15 16:19:00 IST
அரவக்குறிச்சி தேர்தல் 23–ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது சரியல்ல. அன்றைய தினம் தேர்தல் நடந்தால் ஆளும்கட்சியின் குறுக்கீடுகள் அதிகமாக இருக்கும் என திருமாவளவன் கூறினார்.

சிதம்பரம்:

விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் சிதம்பரத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது:–

தமிழக சட்டசபை தேர்தலில் ஜனநாயக செயல்பாடு குறைந்து விட்டது. பணநாயகம் அதிகரித்து விட்டது. தேர்தல் முடிந்தபிறகு இதுதொடர்பாக மக்கள் நலக்கூட்டணி சார்பில் டெல்லி சென்று தலைமை தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்வோம்.

தமிழகத்தில் அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் வருகிற 23–ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது சரியல்ல. அன்றைய தினம் தேர்தல் நடந்தால் ஆளும்கட்சியின் குறுக்கீடுகள் அதிகமாக இருக்கும்.

எனவே 23–ந் தேதி தேர்தல் நடத்துவதை தேர்தல் கமிஷன் மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஓட்டு எண்ணிக்கைக்கு முன்பாக 18–ந் தேதி அரவக்குறிச்சிக்கு தேர்தல் நடத்த வேண்டும். இது தொடர்பாக தேர்தல் கமிஷனுக்கு மனு அனுப்ப உள்ளோம்.

அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் தள்ளி வைத்தது போல் ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலையும் தள்ளி வைக்க வேண்டும். அங்கு ஆளுங்கட்சியினர் பல்லாயிரக்கணக்கானோர் உள்ளனர்.

அதிகாரிகள் மற்றும் தேர்தல் ஆணையர் துணையோடு அத்துமீறல்கள் தொடர்ந்து நடக்கிறது.

உளுந்துர்பேட்டை தொகுதியில் போட்டியிடும் விஜயகாந்தையும், காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடும் என்னையும் தோற்கடிக்க வேண்டும் என்று ஆளுங்கட்சியினர் குறிவைத்து செயல்படுகின்றனர். இது கண்டிக்க தக்கது. மக்களுக்கு எங்களை பற்றி தெரியும். எங்களை வெற்றி பெறச் செய்வார்கள்.

தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. – தி.மு.க.வினரின் அத்துமீறல் அதிகமாக உள்ளது. இதையும் மீறி புதிய வாக்காளர்கள் 1½ கோடி பேர் மக்கள் நலக்கூட்டணிக்கு வாக்களிப்பார்கள்.

தமிழகத்தில் தேர்தல் முறையாக நடைபெற வில்லை இதுதொடர்பாக தமிழக தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி மீது விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு கொடுப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News