பெண்கள் உலகம்

மனதின் பலமும், பலவீனமும்...

Published On 2022-12-21 04:45 GMT   |   Update On 2022-12-21 04:45 GMT
  • மனம் தரும் தகவல்கள், பல நேரம் பிழையானவை.
  • நடந்தவையும், நாம் கண்டவையும், நாம் நடந்ததாக நினைப்பவையும் யாவும் ஒன்றல்ல.

ஒரு வேற்று கிரக வாசி போல், மனதை சற்று தொலைவில் இருந்து கவனித்தால் போதும். மனமாற்றத்துக்கான முதல் விதை இதுதான். மனம் ஒரு சிறந்த பணியாள். அதே நேரத்தில் மோசமான முதலாளி. ஆனால் அதை எப்படி நடத்துவது என்று தெரியாமல்தான் மோசமாக கையாண்டு வருகிறோம். மனம் கண்ணியமானது என்று நம்பும்போது, அது தன் கேவலமான குணத்தை காண்பிக்கும்.

உறுதியானது என்று தீர்மானமாக இருக்கும்போது, அது தன் பலவீனத்தை தெரிவிக்கும். தெளிவானது என்று ஒரு முடிவுக்கு வரும் நேரத்தில் குழப்பம் ஏற்படுத்தும். அலட்சியம் காண்பிக்கையில், அடடே என்று பிரமிக்க வைக்கும்.

நம் மனதை பற்றியே சரியாக கணிக்க முடியாத நிலையில், எதிராளியை பற்றி எல்லாம் தெரிந்ததுபோல் கருத்து சொல்லி கொண்டிருக்கிறோம். நம்மை நினைத்தால் நமக்கே சிரிப்பு வருவது இதனால்தான். மனம் தரும் தகவல்கள், பல நேரம் பிழையானவை. நம் நினைவுத்திறனும் கற்பனை ஆற்றலும் பல நேரம் நிஜத்துடன் பொருந்துவது இல்லை.

நடந்தவையும், நாம் கண்டவையும், நாம் நடந்ததாக நினைப்பவையும் யாவும் ஒன்றல்ல. இருந்தாலும் நம் மனம் தரும் தற்காலிக தகவல்களை நம்பி, வாழ்க்கையின் பெரிய முடிவுகளை எடுத்து சில நேரம் பிரச்சினைகளில் தவிக்கிறோம்.

மனித மனதின் நுட்பமான அறிவுதான், இந்த உலகம் இவ்வளவு முன்னேற வழிவகுத்துள்ளது. ஒவ்வொரு சாதனையும் மனத்தின் வெற்றிதான். அதேநேரம் இங்கு நிகழும் ஒவ்வொரு அவலத்துக்கு காரணமும் மனித மனம்தான்.

கொலைகள், பாலியல் வன்முறைகள், மோதல்கள், நோய்கள், கிளர்ச்சிகளுக்கு காரணமும் மனம்தான். உலகின் அத்தனை சாத்தியக்கூறுகளுக்கும் காரணம் மனித மனம்தான். அதனால் அதன் முழு வீரியத்தை அறிவதுபோல், அதன் அத்தனை வக்கிர குணத்தையும் பலவீனங்களையும் அறிவதும் முக்கியம். மனதை உள்நோக்கி பார்க்கத் தொடங்கும்போது மனமும் வாழ்க்கையும் சீரடையத் தொடங்கும் என்பதே, மனம் சார்ந்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு இருக்கும் நிபுணர்களின் கருத்து.

Tags:    

Similar News