பெண்கள் உலகம்

பெண்களே ஆன்லைன் ஷாப்பிங்கில் அலட்சியம் வேண்டாம்

Update: 2022-11-26 04:05 GMT
  • ஆன்லைன் ஷாப்பிங் உலகம் நம்மை கபளீகரம் செய்து விட்டது.
  • உங்கள் பணத்துக்கு உத்தரவாதம் கிடையாது.

பொருட்களை ஒவ்வொன்றாக வாங்க அலைந்து திரிந்த காலம் போய், இன்று செல்போனில் விரல் நுனியை உரசினால் பாடம் செய்த கறிவேப்பிலை, புற்று மண் முதல் படம் பார்க்கும் டி.வி., கணினி வரை அனைத்து பொருட்களும் வீடு தேடி வந்து சேருகிறது.

ஆன்லைன் ஷாப்பிங்

ஆம். ஆன்லைன் ஷாப்பிங் உலகம் நம்மை கபளீகரம் செய்து விட்டது. கடை கடையாய் ஏறி இறங்கி பொருட்கள் வாங்கிய நாம் இன்று இருந்த இடத்தில் இருந்து கொண்டே ஆர்டர் செய்யலாம். நீங்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அந்த பொருள் உங்களுக்கு கிடைத்து விடுகிறது. ஆர்டர் செய்த பொருள் தாமதமாக கிடைத்தாலும் பெரிதுபடுத்துவதில்லை. ஆன்லைன் நிறுவனங்கள் கவர்ச்சிகரமான சலுகை, ஒன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு பொருள் இலவசம், இலவச டெலிவரி என்று பொருட்களை வாங்கும் ஆர்வத்தை தூண்டிவிடுகிறது. எதற்கு அலைந்து திரிந்து கடைக்கு சென்று வாங்க வேண்டும்.போக்குவரத்து செலவு மிச்சம். அதிகபட்ச சலுகையில் விலை சற்று குறைவாக வேண்டிய பொருட்களை ஆர்டர் செய்து வாங்கி கொள்ளலாம். அலட்டிக் கொள்ளாமல் வீட்டுக்கே வந்து கொடுக்கிறார்கள் .

மருந்து முதல் விருந்து வைக்கும் பொருட்கள் வரை அனைத்தும் ஆன்லைனில் கிடைத்தாலும் ஆன்லைன் ஷாப்பிங்கில் சில குறைபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆர்டர் செய்த பொருளுக்கு பதில் வேறு பொருள் வருவது, பழுதான, உடைந்த செயல்படாத பொருட்கள் வருவது என்பது அடிக்கடி நிகழ்கிறது. இந்த பஞ்சாயத்துகள் கூட பல நுகர்வோர் கோர்ட்டுகளுக்கு சென்று விடுகின்றன. அதன் மூலம் நுகர்வோருக்கு நிவாரணம் கிடைக்கிறது.

பிரபலமாகி மக்களை ஆட்கொண்டு வரும் ஆன்லைன் பற்றி பலருக்கு முழுவதுமாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை.வாருங்கள் அதைப்பற்றி இங்கே காண்போம்.

ஆன்லைனில் 'புதிதாக சந்தையில் என்ன வந்திருக்கிறது'என்று தேடும்போது அது தற்போது உங்களுக்கு கட்டாயம் தேவையா? என்று யோசித்து விட்டு 'ஆம்' என்றால் மட்டுமே ஆர்டர் போடுங்கள். உங்களது கிரெடிட்,டெபிட் கார்டு குறித்த விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்து வைக்க வேண்டாம். ஏதாவது ஒரு பொருளை வாங்க நீங்கள் ஆசைப்படும்போது கிரெடிட்,டெபிட் கார்டு குறித்த விவரங்கள் ஆன்லைனில் பதிவு செய்து வைத்து இருந்தால் உடனே ஆர்டர் போட்டுவிடுவீர்கள். அதையே தேடி எடுத்து பதிவேற்றம் செய்வதற்கான நேரத்தில் தேவையற்ற பொருளை வாங்கலாமா? என யோசிக்க அவகாசம் கிடைக்கும் ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் பல நிறுவனங்கள் தனது பொருளை விற்பனை செய்கின்றன.

குறுந்தகவல் அவசியம்

நீங்கள் வாங்கும் பொருளை விற்பனை செய்வது யார் என்பதிலும் கவனமாயிருங்கள். அவர்களை பற்றிய கருத்து பதிவுகளை கவனிப்பது முக்கியம். ஆன்லைனில் நிறைய சலுகை அறிவிப்பார்கள். விலை குறைவாக இருந்தாலும், அது உங்கள் கையில் கிடைக்கும் வரை ஆகும் செலவுகளை ஒப்பீடு செய்யுங்கள்.பொருளை பார்த்து விலை குறைவு என்றவுடன், 'அந்த பொருளை மற்றவர் வாங்கிவிட்டால்?' என்கிற வேகத்தில் ஆர்டர் போட வேண்டாம். அது பலரால் பயன்படுத்தப்பட்ட பொருளா? அது சிறப்பானதா? என்று பாருங்கள். பொருளை பற்றி உள்ள விளக்கத்தை முழுமையாக படிக்காமல் ஆர்டர் போடவே வேண்டாம். ஆர்டர் செய்யும்முன், பொருட்கள் கிடைக்கும் காலத்தோடு வர்த்தகம் நடைபெறும் நாட்களையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். விடுமுறை நாட்களில் பொருளை தருவார்களா? என்று கேட்டறிந்து கொள்வது நல்லது. ஆன்லைனில் ஆர்டர் போட்டவுடன் வரும் மெயில் மற்றும் செல்போன் குறுந்தகவல்களை பத்திரப்படுத்த வேண்டும். பொருள் கிடைப்பதில் குளறுபடி ஏற்பட்டால், இந்த தகவல்களை கொண்டே அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியும். இந்த குறுந்தகவல் இல்லாவிட்டால், எந்த நிவாரணத்தையும் பெற முடியாது.

தவறாமல் படிக்கவும்

செல்போன், எலக்ட்ரானிக் பொருட்கள் என எதை நீங்கள் ஆர்டர் செய்திருந்தாலும் பார்சல் கொண்டு வருபவர்களை கொஞ்ச நேரம் காத்திருக்க சொல்லிவிட்டு, நீங்கள் ஆர்டர் செய்த பொருள் அதுதானா? என்பதை சோதித்து பார்த்துவிட்டு, பெற்ற பிறகே அவர்களை அனுப்பவும்.நீங்கள் வாங்கிய பொருள் எலக்ட்ரானிக் பொருளாக இருப்பின், வாங்கியவுடன் அது செயல்படுகிறதா? என்பதை சோதிக்கவும். அதில் பிரச்சினை இருந்தால் உடனடியாக மாற்றி கொள்ள முடியும்.நேரில் பொருள் வாங்கும்போது ஆராய்ந்து வாங்குகிறோம். ஆன்லைனில் வாங்கும்போது அதற்கான வாய்ப்பில்லை. ஒரு பொருளை ஆர்டர் செய்யும்முன் அதை பற்றிய விவரங்களை முழுமையாக அறிந்து கொள்வது அவசியம். நேரில் வாங்கும்போது அடுத்தவரின் ஆலோசனை கேட்போம். ஆன்லைனில் வாங்கும்போது அந்த நிறுவனத்தின் ரேட்டிங் என்ன, ஏற்கெனவே பொருள் வாங்கியவர்களின் அனுபவங்களையும் தவறாமல் படிக்க வேண்டும்.

ரிட்டன் பாலிசி

நீங்கள் ஆன்லைன் ஷாப்பிங் செய்வதற்கு முன்னால் ஷாப்பிங் செய்யும் இணையதளத்திற்கு சென்று பொருட்களுக்கான தொகையை திரும்ப பெறும் ரிட்டன் பாலிசி, ரீஃபண்ட் பாலிசி போன்ற விவரங்களை முதலில் பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டும். அப்படி ரிட்டன் பாலிசி இருந்தால் அதன் விதிமுறைகள் அனைத்தையும் படித்து பார்க்க வேண்டும். எத்தனை நாட்களில் பொருட்கள் ரிட்டன் செய்யப்படும், எவ்வளவு பணம் திரும்பக் கிடைக்கும் என்பன போன்ற விவரங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதேபோல, ரிட்டன் செய்ய வேண்டிய பொருட்களை வாங்க உங்கள் வீட்டுக்கே வருவார்களா அல்லது நீங்கள்தான் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு அனுப்ப வேண்டுமா? என்பதையும் பார்க்க வேண்டும்.நாம் ஒரு பொருளை கேட்க, நமக்கு அனுப்பப்படும் பொருள் வேறாக இருக்கலாம். ஆர்டர் செய்து பெறும் பொருள் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கலாம். ஆர்டர் செய்த பொருள் வராமல்கூட போகலாம்.

அதனால் ஆன்லைனில் ஷாப்பிங் செய்வோரே, சற்றும் அலட்சியமாக இருந்துவிடாதீர்கள். அவ்வாறு இருந்துவிட்டால் உங்கள் பணத்துக்கு உத்தரவாதம் கிடையாது. அதனால் மிகவும் கவனம் தேவை.

கேஷ்பேக் சலுகை

ஆன்லைனில் பொருட்களை வாங்கும்போது அப்பொருளுக்கு கேரண்டி - வாரண்டி என்ன? என்ற விவரங்களை பார்க்க வேண்டும். பொருளுக்கு ஏதாவது தள்ளுபடி வழங்கப்படுகிறதா? அதே பொருளுக்கு வேறு தளங்களில் அதிக தள்ளுபடி கிடைக்குமா? என்று பார்க்க வேண்டும். பல்வேறு நிறுவனங்கள் வழங்கும் சலுகைகளை நீங்கள் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். கேஷ்பேக் போன்ற சலுகைகளையும் நீங்கள் பெற முடியுமா? என்று பார்க்க வேண்டும். ஒருவேளை நீங்கள் வாங்கும் பொருளை திரும்ப வழங்குவதாக இருந்தால் கேஷ்பேக் போன்ற சலுகைகள் திரும்ப பெறப்படுமா? என்றெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

தவணை முறை ஆபத்தா?

ஆன்லைனில் வாங்க விரும்பும் பொருள் அதிக விலை கொண்டதாக இருந்தால் பெரும்பாலும் தவணை (ஈ.எம்.ஐ.) முறையில் வாங்குவார்கள். இப்போதெல்லாம் குறைந்த விலை கொண்ட பொருளாக இருந்தால் கூட தவணை முறையில் வாங்க நினைக்கின்றனர். ஒவ்வொரு மாதமும் நீங்கள் குறைந்த பணம் செலுத்தினால் போதும் என்பது உங்களுக்கு சுலபமாக தெரிந்தாலும், ஒட்டுமொத்தமாக பார்த்தால் நீங்கள் பொருளின் அசல் விலையை விட அதிக பணம் கொடுக்க வேண்டியிருக்கும். எனவே, நீங்கள் ஆன்லைன் மூலமாக பொருட்களை வாங்கும்போது, கிரெடிட் கார்டு மூலமாகவோ அல்லது டெபிட் கார்டு மூலமாகவோ வாங்கினால், அதற்கு வட்டி பிடிக்கப்படுகிறதா, எவ்வளவு வட்டி பிடிக்கப்படுகிறது என்ற விவரத்தை எல்லாம் முன்கூட்டியே தெரிந்துகொள்ள வேண்டும்.பொருட்களை ஆர்டர் செய்யும்போது அதை டெலிவரி செய்வதற்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுமா என்பதை நீங்கள் ஆர்டர் செய்யும்போதே கட்டாயம் பார்க்க வேண்டும்.

பொதுவாக, அதிக விலை கொண்ட பொருட்கள் வாங்கும்போது டெலிவரி கட்டணம் இருக்காது அல்லது குறைவாக இருக்கும். ஆனால் மிக நீண்ட தூரத்திலிருந்து பொருட்கள் கொண்டு வரப்பட்டாலோ அல்லது பொருளின் பாதுகாப்பு தன்மையை பொறுத்து டெலிவரி கட்டணம் வசூலிக்கப்படும். எனவே பொருளின் விலை மற்றும் டெலிவரி கட்டணம் போன்றவற்றை கணக்கிட்டு அது கடையில் விற்பனை செய்யும் விலையை விட மிக அதிகமாக இருந்தால் நீங்கள் கடையில் அப்பொருளை வாங்குவதே சிறந்தது.

Tags:    

Similar News