பெண்கள் உலகம்

பெண்கள் 'கொக்கிடமா' செய்து வீட்டில் இருந்து லாபம் ஈட்டலாம்...

Update: 2022-10-03 04:02 GMT
  • இது போன்சாய் போன்ற தொழில்நுட்பம் தான்.
  • இதை ஏழைகளின் போன்சாய் (poor mans bonsai) என்றே சொல்லலாம்.

நம்மில் பலருக்கு அலங்கார செடிகள் வளர்ப்பதில் ஆர்வம் இருக்கும். ஆனால் அதில் உள்ள வாய்ப்புகள் தெரிவதில்லை. அழகு செடிகள் வளர்ப்பதில் பல தொழில்நுட்பங்கள் இருக்கின்றன. அதில் மிக எளிமையாகவும் அழகாகவும் செய்ய கூடிய ஒன்று தான் கொக்கிடமா (kokedama).

அது என்ன கொக்கிடாமா என்று பார்க்கிறீர்களா? இதுவரையில் பெரிய அளவில் கேள்விகள் எழுப்பப்படாவிட்டாலும், இந்த யோசனை முதன்முதலில் தொடங்கியது ஜப்பானில் தான்.

இது போன்சாய் போன்ற தொழில்நுட்பம் தான். ஆனால் போன்சாய் செய்வதற்கு அதிக செலவு ஆகும். கொக்கிடமா செய்வதற்கு மண் மற்றும் பாசி (peat moss) இவை இரண்டும் இருந்தாலே போதும். அதனால் இதை ஏழைகளின் போன்சாய் (poor mans bonsai) என்றே சொல்லலாம்.

கொக்கிடமா என்பது தாவரத்தின் வேர் பாகத்தை மண் பந்தினுள் நிறுத்தி அதற்கு மேல் மென்மையான பசுமையான பாசியை வைத்து அழகுபடுத்துவதுதான். பின்னர் இந்த அமைப்பை குறிப்பிட்ட இடத்தில் அழகுக்கு வைப்பதற்கு ஏற்ப நூலினை வைத்து வடிவமைக்க வேண்டும்.

உகந்த தாவரங்கள்

நிழலில் வளரக்கூடிய, நிழலை அதிகம் விரும்பக்கூடிய தாவரங்கள் இதற்கு பொருத்தமானதாகும். கொக்கிடமா செய்வதற்கு பொருத்தமான சில தாவரங்களின் பெயர்கள்,

*சென்சிவேரியா

*ஜாமியோகல்காஸ் ஜாமிபோலியா (Zamioculcas zamiifolia Zz)

*மணி பிளான்ட் (money plant)

*அந்தூரியம் (anturium)

* பிலோடென்ரான் (philodendron)

*டிராசியேனா (Dracaena)

இவை மட்டுமில்லாமல் வீட்டினுள் வளர்ப்பதற்கு ஏற்ற தாவரங்களும், சதைப்பற்று அதிகம் உள்ள அழங்கார தாவரங்களையும், சிறிய வேர்த்தொகுப்பு உள்ள தாவரங்களையும் இதற்கு பயன்படுத்தலாம்.

எப்படி செய்வது?

முதலில் மண் மற்றும் பாசி (peat moss) 2-யும் சேர்த்து நாம் எடுக்கும் தாவரத்தை பொறுத்து சிறிய பந்து போன்ற அமைப்பை உருவாக்க வேண்டும். பின்னர் அதனுள் நாம் தேர்ந்தெடுத்த தாவரத்தின் வேர்பகுதியை அந்த பந்தின் நடுப்பகுதியில் வைத்து நூலினால் கட்டவேண்டும். மேலும் அழகு சேர்க்க பசுமையான பாசியினை அதன் மேல் வைக்கலாம். பின்னர் அதை பயன்படுத்தும் இடத்திற்கு ஏற்ப வடிவமைத்துக்கொள்ளலாம்.

இதில் நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், சதைப்பற்று அதிகம் உள்ள தாவரங்களுக்கு மண்ணின் விகிதம் அதிகமாகவும் பாசி (peat moss) குறைவாகவும் இருக்க வேண்டும். அதே தண்ணீர் அதிகம் தேவைப்படும் தாவரங்களுக்கு மண்ணின் விகிதம் குறைவாகவும் பாசி (peat moss) அதிகமாகவும் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். 2 அல்லது 3 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் தெளித்தால் போதுமானது. நாம் செய்யக்கூடிய பூச்சட்டிக் கலவை நன்கு காற்றோட்டம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

வியாபார வாய்ப்பு

இன்றயை சூழலில் திருமண நிகழ்வுகளில் தாம்பூலங்கள் வழங்குவது மக்களிடையே பிரபலமாகி வருகிறது. திருமண தாம்பூல பரிசாக இனிப்பு மற்றும் காரங்களை தருவதே வழக்கமாக உள்ளது. ஆனால் ஒரு சிலர் மட்டுமே விதைகளையும் மரக்கன்றுகளையும் பரிசாக தருகின்றனர். நாம் சற்று வித்தியாசமாக அழகு தாவரங்களையும் பரிசளிக்கலாம். இது நம் உறவினர்களுக்கு நினைவு சின்னமாகவும் மனநிம்மதி தரும் வகையிலும் அமையும்.

மேலும், கார்பொரேட் கம்பெனிகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் ஒப்பந்த அடிப்படியில் இதை நாம் அவர்களுக்கு அமைத்துக் கொடுத்து லாபம் பார்க்கலாம். இதன் நுணுக்கங்களை நாம் நன்றாக கற்று கொண்டால் மற்றவர்களுக்கு கற்று கொடுத்தும் லாபம் பார்க்கலாம்.

அதோடு இன்றைய இணைய உலகில், சந்தை வாய்ப்புகளை அங்கிருந்தே தொடங்கி, நமது வலைதளம் மூலமாகவும் விற்பனை செய்து நல்ல வருவாய் பெற முடியும்.

Tags:    

Similar News