பெண்கள் உலகம்

மாதவிடாய் கப் - பயன்படுத்துவது எப்படி?

Published On 2022-11-03 04:54 GMT   |   Update On 2022-11-03 04:54 GMT
  • மாதவிடாய் கப் பெரும்பாலும் அலர்ஜியை ஏற்படுத்தாது.
  • பல ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம்.

பெண்களுக்கு மாதவிடாய்க் காலப் பயன்பாட்டுக்குக் கிடைத்திருக்கக் கூடிய மிகப் பெரிய வரம், இந்த மாதவிடாய் கப் என்று கூறலாம். பார்ப்பதற்கு சிறிய அளவிலான கப் போன்று இருக்கும் இந்த மாதவிடாய் கப் பல வருடங்களாகப் பயன்பாட்டில் இருந்தாலும், இதனைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவே.

சிலிகானால் செய்யப்பட்ட மாதவிடாய் கப், பெரும்பாலும் அலர்ஜியை ஏற்படுத்தாத வகையிலே தயாரிக்கப்படுகிறது. ஒருமுறை பயன்படுத்திய பின் வெந்நீர் கொண்டு சுத்தம் செய்த பின்னர், மறுமுறை பயன்படுத்தலாம். பல ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம். வெந்நீரில் சுத்தப்படுத்துவதால் அதன் தன்மையில் எந்த மாற்றமும் ஏற்படாது. கீழே விழுந்துவிடுமோ என்ற அச்சம் தேவையில்லை, அதற்கான வாய்ப்பும் இல்லை.

சிறுநீர் வெளிவரும் வழி, இனப்பெருக்க வழி, மலத்துளை இவை மூன்றையும் தசை இறுக்கமாகப் பிடித்து வைத்திருக்கும். எனவே, மாதவிடாய் கப் பயன்படுத்தினால் தசைத் தளர்வால் அது இறங்கிவிடும் என்ற அச்சம் தேவையற்றது.

காப்பர் டீ உள்ளிட்ட கர்ப்பத்தடை சாதனங்களைப் பயன்படுத்துபவர்கள் மாதவிடாய் கப் பயன்படுத்தும்போது, அந்தச் சாதனங்கள் தங்களது நிலையில் இருந்து மாறிவிடுமோ என்று அச்சப்படலாம். அவ்வாறு நிச்சயமாக நிகழாது.

எப்படிப் பயன்படுத்த வேண்டும்?

நின்ற நிலையில், அல்லது இண்டியன் டைப் டாய்லெட்டை பயன்படுத்தும்போது அமரும் நிலையில் அமர்ந்து மாதவிடாய் கப்பை பொருத்தவேண்டும். இப்படிச் செய்வது மிகச் சிறந்தது.

பெண்ணின் இனப்பெருக்க உறுப்பில், மாதவிடாய் கப்பை இரண்டாக மடித்து உள்ளே செலுத்த வேண்டும். பின் அதனை விடுவிக்கும் போது பாராசூட் போன்று விரிவடையும். அதன்பின் அதனை மெதுவாகச் சுழற்றினால் சரியாகப் பொருந்திவிடும். அதேபோல, ரிமூவ் செய்யும்போது ஆள்காட்டி விரலால் அதற்குச் சிறிது அழுத்தம் கொடுத்தால் தானாக வெளிவந்துவிடும்.

மாதவிடாய் கப்களில் பல அளவுகள் உள்ளன. பொருந்தும் அளவை தேர்ந்தெடுத்து வாங்கிக் கொள்ளலாம்.

மாதவிடாய் கப்பை பயன்படுத்துவதில் மேலும் சந்தேகங்கள் இருப்பின் ஒரு மகப்பேறு மருத்துவரிடம் சென்று தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். பயன்படுத்தும்போது 8 மணி நேரத்திற்கு ஒருமுறை அதனை எடுத்துச் சுத்தப்படுத்தி மறுபடி பயன்படுத்துங்கள். நாப்கின் பயன்படுத்தும்போது ஏற்படக் கூடிய அலர்ஜி இதில் ஏற்படாது.

ஒரே ஒரு முக்கியமான விஷயத்தை நினைவில் கொள்ளுங்கள். மாதவிடாய் கப்பை பயன்படுத்தும் போது காயம் தவிர்க்க விரல்களில் நகம் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

Tags:    

Similar News