பெண்கள் உலகம்

காலாவதியான நாப்கின்... பெண்களுக்கு வரும் ஆரோக்கிய சீர்கேடுகள்...

Published On 2023-02-03 04:59 GMT   |   Update On 2023-02-03 04:59 GMT
  • ‘கருப்பை வாய் புற்றுநோய்’ ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.
  • ஒரு நாப்கினை 3 மணிநேரம் மட்டுமே உபயோகிக்க வேண்டும்.

மாதவிடாய் காலங்களில் பெண்கள் கடைப்பிடிக்கும் சில ஒழுங்கற்ற பழக்கவழக்கங்கள், அவர்களை பெரும் சிக்கலில் சிக்கவைத்துவிடுகிறது. தவறு என்பதை உணராமலே, காலங்காலமாக அதைச் செய்கிறார்கள்.

பெண்கள் முக அழகிற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தில் சிறிதளவு கூட நாப்கின் விஷயத்திற்கு கொடுப்பதில்லை. எத்தனை பெண்கள், சானிட்டரி நாப்கினின் காலாவதி தேதியைப் பார்த்து வாங்குகிறார்கள்?. யாருமே நாப்கினின் காலாவதி விவரங்களைக் கவனிப்பதில்லை.

காலாவதியான நாப்கின்களை பயன்படுத்துவது என்பது, காலாவதியான மாத்திரைகளால் உண்டாகும் ஆபத்தைவிட, இரு மடங்கு கூடுதலானது. அதுவும் 'சென்சிட்டிவ்' உறுப்பு என்பதால், ஆபத்து பல மடங்காகிறது.

மேலும், எந்தெந்த நாப்கின்கள் எந்தெந்த பொருட்களால் தயாராகிறது?, கேடு விளைவிக்கும் பொருட்கள் இருக்கிறதா?, அந்த நாப்கினின் வெளி உலக கருத்து எப்படி இருக்கிறது? போன்ற விஷயங்களில் பெண்கள் கவனம் செலுத்துவதே இல்லை.

பெரும்பாலான நாப்கின்கள் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்-பேப்பர்-அட்டை கழிவுகள் மூலமாகவே உருவாக்கப்படுகின்றன. அதில் டயாக்ஸின் என்ற நச்சுப்பொருள் இருப்பதால், பெண்மை சார்ந்த விஷயங்களில் பல ஆரோக்கிய சீர்கேடுகள் உண்டாகின்றன.

பெரும்பாலான பெண்கள் அசுத்தம் நிரம்பிய நாப்கினை, 12 மணி நேரம் வரை தொடர்ச்சியாகப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் மருத்துவர்களின் பரிந்துரைப்படி ஒரு நாப்கினை 3 மணிநேரம் மட்டுமே உபயோகிக்க வேண்டும். ஏனெனில் அசுத்தம் நிரம்பிய ரத்தத்தில் பாக்டீரியாக்கள் நிறைந்திருக்கும். அவை பல்கிப் பெருகும் பட்சத்தில், பல ஆரோக்கிய சீர்கேட்டைச் சந்திக்க நேரிடும். ஏன்...? 'கருப்பை வாய் புற்றுநோய்' ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.

நிறையப் பெண்கள் மாதவிடாய் காலங்களில் இயல்பிற்கு அதிகமான வலியை உணர்கிறார்கள். இந்த காலத்துப் பெண்களில் பலருக்கு பி.சி.ஓ.டி. பிரச்சினை வெகு இயல்பாகிவிட்டது. அதேபோல மலட்டுத் தன்மை, மார்பக புற்றுநோய், வெள்ளைப்படுதல் பிரச்சினைகளும் அதிகரித்திருக்கிறது. இவை அனைத்திற்கும், பெண்களின் மாதவிடாய் கால ஒழுங்கற்ற பழக்கவழக்கங்களும் முக்கிய காரணமாகின்றன.

தடுக்கும் வழிமுறைகள்...

ஆரோக்கியமான, சுகாதாரமான இயற்கையான நாப்கின்களை பயன்படுத்துங்கள். அதாவது பிளாஸ்டிக் பொருட்களில் தயாராகும் நாப்கின்களைவிட, பருத்தி துணிகளில் தயாராகும் பாரம்பரிய முறையிலான நாப்கின்கள் சிறப்பானதாக இருக்கும். ஏனெனில் காற்றோட்டத்திற்கு வழிவகுக்கும் நாப்கின்களே, பெண் ஆரோக்கியத்திற்கும், சுகாதாரத்திற்கும் சிறந்தது. 24 மணிநேரமும் பாக்டீரியாக்களுடன் போராடக்கூடிய அயனிகள் அடங்கிய நாப்கின்களும் சந்தையில் இருக்கின்றன.

ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சினைகளை சீராக்கும் அகச்சிவப்பு கதிர் மற்றும் உடல் சோர்வடைவதைத் தவிர்க்க உதவும் காந்த சக்தி மற்றும் வைட்டமின் டி அடங்கிய சுகாதாரமான நாப்கின்களும் நிறைய இருக்கின்றன. இதனுடன், மண்ணில் எளிதாக மக்கக்கூடிய நாப்கின்களை தேர்வு செய்து பெண்ணையும், மண்ணையும் சுகாதாரமாக பாதுகாக்க வேண்டும். சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது நல்ல விஷயம் என்றாலும், ஆரோக்கியம் சார்ந்த, குறிப்பாகப் பெண்மை சார்ந்த விஷயங்களில் அதுபோன்ற தவறுகளைச் செய்துவிடக்கூடாது. முடிந்தவரை, இயற்கை முறையில் உயர்தரத்தில் தயாரான நாப்கின்களை வாங்கி பயன்படுத்துங்கள்.

Tags:    

Similar News