பெண்கள் உலகம்

சிக்கல்களை விளைவிக்கும் `செல்போன் செயலிகள்'

Update: 2022-11-24 04:04 GMT
  • செயலிகளின் மூலம் எண்ணற்ற நன்மைகள் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.
  • செல்போன் செயலிகளில் இருக்கும் சிக்கல்கள் என்னவென்பதை காண்போம்.

உள்ளங்கையில் உலகம்...

இது தான் தகவல் தொழில்நுட்ப

வளர்ச்சியின் சாதனை...

ஆம்! இன்று நம் கைகளில் தவழும் அறிவியலின் குழந்தையான செல்போன் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சம் என்றே சொல்லலாம். 6-மாத குழந்தை முதல் 60-வயது முதியவர்கள் வரை சாதாரணமாக அனைவரது கைகளில் இருக்கும் செல்போனானது மனிதர்களின் வாழ்வை சிகரம் தொட வைத்ததோடு, சிந்திக்கும் அறிவாற்றலையும் பெருக செய்கிறது. ஒரே இடத்தில் இருந்து கொண்டு உலகில் உள்ள எந்தவொரு நபரிடமும் சில நொடிகளிலேயே தகவல்களை பரிமாறும் பரந்தவொரு சேவையை செல்போன்கள் அளித்து வருகின்றன.

தகவல்கள் மட்டுமின்றி வணிகம், சினிமா, விளையாட்டு, பொழுதுபோக்கு, பண பரிமாற்றம், அறிவியல் மற்றும் வரலாற்று தரவுகள் உள்ளிட்ட அனைத்து துறை செயல்பாடுகளையும் இணையம் மற்றும் செயலிகள் மூலம் அவை வழங்குகின்றன. 1ஜி, 2ஜி, 3ஜி, 4ஜி என்று இருந்த தொலைத் தொடர்பு சேவையின் 5-வது தலைமுறையான 5ஜி-யும் தற்போது வந்துவிட்டது. 4-தலைமுறைகளில் இல்லாத அளவில், வினாடிக்கு 1 ஜிகா-பைட் என்ற வேகத்தில் இணையத்தின் செயல்பாடு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மனித வாழ்க்கையை குறுகிய காலத்திலேயே முன்னேற்ற பாதைக்கு கொண்டு சென்ற செல்போன்களை தமது இன்னொரு இதயமாக கருதி, அனைவரும் அதனை பாதுகாக்கின்றனர்.

இத்தகை செல்போன்களை மூளையாக இருந்து செயல்பட வைப்பது செயலிகள்தான்(ஆங்கிலத்தில் அப்ளிகேஷன்). வெவ்வேறு விதமான செயலிகளின் உதவியோடு தமது அன்றாட பணிகள் மற்றும் தேவைகளை அனைத்து தரப்பு மக்களும் நிறைவேற்றுகின்றனர். அனைத்து துறைகளிலும் முக்கிய பங்கு வகிக்கும் செயலிகளின் மூலம் எண்ணற்ற நன்மைகள் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது சில நபர்கள் போலியான செயலிகளை உருவாக்கி அதன் மூலம் மோசடி சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பலர் பணத்தை இழந்ததோடு, உயிரையும் மாய்த்து வரும் சோகமும் நடந்தேறி வருகிறது. நாளுக்கு நாள் பெருகி வரும் செல்போன் செயலிகளில் இருக்கும் சிக்கல்கள் என்னவென்பதை காண்போம்.

மோசடி போன்கால்:

செயலிகள் வருவதற்கு முந்தைய காலத்திலும் செல்போன் மோசடி என்பது இருந்தது. அதாவது நமக்கு தெரியாத செல்போன் எண்ணில் இருந்து வரும் சில குறிப்பிட்ட அழைப்புகளில் பேசும் முகம் தெரியாத நபர்கள் பொய்யான நிறுவனத்தின் பெயரைக் கூறி மோசடி செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இதில் உங்களது செல்போன் எண்ணிற்கு விலை உயர்ந்த பரிசு பொருள் கிடைத்துள்ளது. தபால் மூலம் பரிசுப் பொருள் உங்களை வந்து சேரும். அதற்கு நீங்கள் குறிப்பிட்ட தொகையை செலுத்தி வாங்க வேண்டும் என்று தெரிவித்து, எதுவும் இல்லாத பார்சலை அனுப்பி பணத்தை அபகரித்து சென்ற சம்பவங்கள் நடந்துள்ளது.

அதுபோல, சமூக ஊடகங்களில் அறிமுகமாகும் சில நபர்கள் தான் வெளிநாட்டில் இருப்பதாகவும், உங்களுக்கு விலை உயர்ந்த பரிசு பொருட்கள் அனுப்புவதாகவும் கூறி, பண மோசடியில் ஈடுபடுகின்றனர். இது பற்றிய விழிப்புணர்வு அனைவரிடத்திலும் ஏற்பட்டாலும், இன்னும் சில நபர்கள் இந்த மோசடியில் சிக்கி கொள்வது வழக்கமாகவே இருந்து வருகிறது. ஆனால் தற்போது இதையெல்லாம் மிஞ்சும் வண்ணம் மோசடி சம்பவங்கள் நாளுக்கு நாள் அரங்கேறி வருகின்றன.

முதலீட்டில் அதிக வருமானம்:

இன்றைய நவீன உலகில் அனைத்து தரப்பு மக்களும் தங்களது வருங்கால சேமிப்பிற்காக முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனை அறிந்து கொண்ட மோசடி கும்பல் வங்கி மற்றும் பிசினஸ் செயலி என்று பல்வேறு விதமான போலி முதலீட்டு (இன்வெஸ்மெண்ட்) செயலிகளை உருவாக்கி, அதில் முதலீடு செய்யும் நபர்களுக்கு அதிக வட்டி மற்றும் நிலையான வருமானம் தொடர்ந்து வழங்குவதாக கூறி ஈர்ப்பை ஏற்படுத்துகின்றனர். தொடக்க காலத்தில் சிறிய முதலீடு செய்யும் நபர்களை கவரும் வண்ணம் அவர்களுக்கு பணப்பலன்களை அளித்துவிட்டு, பின்னர் அவர்கள் செய்யும் பெரிய அளவிலான முதலீட்டின் போது பணப்பலன் வழங்காமல் மோசடி சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.

கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் சீன முதலீட்டு செயலி மூலம் நடைபெற்ற ரூ.150 கோடி மோசடி தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டனர். நாடு முழுவதும் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களிடம் இந்த கும்பல் பண மோசடி செய்தது அம்பலமானது. இதேபோல், கடந்த அக்டோபர் மாதம் ஐதராபாத்தில் கைது செய்யப்பட்ட மோசடி கும்பல் சீன முதலீட்டு செயலியைக் கொண்டு ரூ.900 கோடி அளவில் மோசடி செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இவ்வாறு பல்வேறு போலி முதலீட்டு செயலிகளின் மூலம் நாளுக்கு நாள் மோசடி சம்பவங்கள் நடந்து வருவதால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பண பரிமாற்றம்:

பண பரிமாற்றத்தில் உள்ள நேர விரையம் மற்றும் நேரடி வங்கி பயன்பாடு ஆகியவற்றை எளிதாக்கும் வகையில், நவீன தொழில்நுட்பங்களுக்கேற்ப உருவாக்கப்பட்டதே ஆன்லைன் பண பரிமாற்ற செயலி. இந்த செயலியின் மூலம் வங்கிகளுக்கு செல்லாமலேயே, ஒருவரின் வங்கி கணக்கில் இருந்து மற்றொருவரின் வங்கி கணக்கிற்கு நாம் பண பரிமாற்றம் செய்ய இயலும். இவ்வாறு எளிதாக்கப்பட்ட முறையினை தற்போது அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால் இந்த செயலிகளைப் போன்று போலியான பெயர்களில் பல செயலிகள் ஊடுருவி வருகின்றன. இந்த செயலிகளானது, நாம் அளிக்கும் தரவுகளின் மூலம் பண பரிமாற்றம் நிகழ்ந்தது போல போலியான சான்றுகளை அளிக்கும். ஆனால் சம்பந்தப்பட்டவரின் கணக்கிற்கு பணம் செல்லாது. இதனை பயன்படுத்தி சில நபர்கள் பண பரிமாற்றம் செய்தது போல மோசடியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த மோசடி சம்பவங்களில் சிறு கடைகள் முதல் பெரு நிறுவனங்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளன.

விளையாட்டில் விபரீதம்:

மைதானத்தில் விளையாடிய காலங்கள் கடந்து, தற்போது செல்போன் திரையில் விளையாடிக் கொண்டிருக்கின்றனர் இன்றைய தலைமுறையினர். செல்போன் செயலிகளில் பொழுது போக்குக்காக தொடங்கப்பட்ட விளையாட்டுகள் தற்போது முதலீடு என்ற கவர்ச்சிகரமான வலைபின்னலில் பலரை சிக்க வைத்து மோசடி செய்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பலரும் தங்களது பணத்தை இழந்து பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டனர். இதில் பாதிக்கப்பட்ட சிலர் தற்கொலை செய்த சம்பவங்களும் நாம் அறிந்த ஒன்றே. நாள்தோறும் விளையாட்டின் மூலமும் விபரீதங்கள் அதிகரித்து கொண்டே வருகிறது.

கடன் முறைகேடு:

இவ்வாறு அணிவகுத்து கொண்டிருக்கும் மோசடி செயலிகளின் வரிசையில், தற்போது பெரும்பான்மையான மக்களை பதம் பார்த்து கொண்டிருக்கும் ஒரு செயலி தான் கடன் செயலி. அவசரத் தேவைக்காக பணம் கிடைக்காத சில நபர்கள் உடனடியாக பணம் கிடைப்பதால் இந்த செயலிகளை நாடுகின்றனர். குறைந்த வட்டியில் பணம் தருவதாக கூறி, பின்பு அதிக பணம் செலுத்துமாறு வற்புறுத்துகின்றனர். பணம் பெறும் நபர்களின் செல்போன் தரவுகளை இந்த செயலிகளின் மூலம் மோசடி நபர்கள் சேகரித்துக் கொள்கின்றனர். பின்னர் அதிக பணம் கேட்டு மிரட்டும் செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இதையடுத்து அதிக பணம் தர மறுக்கும் நபர்களை பற்றி, அவர்களின் செல்போனில் இருந்து பெறப்பட்ட எண்களுக்கு அவதூறான செய்திகளை பரப்புகின்றனர். மேலும், இதன் அடுத்தகட்டமாக அவர்களது செல்போன் தரவுகளின் மூலம் சேகரித்த புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து, அவர்களுக்கும், அவர்களது நண்பர்களுக்கும் பகிரும் முறைகேடான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பலர் பாதிக்கபட்டுள்ளனர். இதில் பாதிப்படைந்த சிலர் மனமுடைந்து விரக்தியில், தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் நிகழ்ந்து வருகிறது.

இதைப்போல, மோகத்தினால் சிலர் டேட்டிங் செயலியில் போலியான கணக்கு வைத்திருக்கும் நபர்களை நம்பி பணத்தை இழக்கின்றனர்.

பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மனிதர்களின் செயல்பாட்டை எளிதாக்குதல், பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு உள்ளிட்ட வசதிகளுக்காக உருவாக்கப்பட்ட செயலிகளை சிலர் தவறாக உபயோகித்து அதனை வியாபார நோக்கில் பயன்படுத்தி வருகின்றனர். முறையற்ற இந்த செயல்பாட்டினால் பல்வேறு மக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்படுகின்றனர். வெவ்வேறு விதமான மோசடி சம்பவங்கள் செல்போன் செயலிகள் மூலம் அரங்கேறி வருவதால், அதில் சிக்காமல் இருப்பது என்பது சவால் மிகுந்த ஒன்றாகவே தற்போது வரை இருந்து வருகிறது.

Tags:    

Similar News