கால்பந்து

பிரேசில் அணிக்காக அதிக கோல் - பீலே சாதனையை முறியடித்தார் நெய்மர்

Published On 2023-09-10 20:09 GMT   |   Update On 2023-09-10 20:09 GMT
  • உலக கோப்பை கால்பந்து போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது.
  • 2026 உலக கோப்பை கால்பந்து போட்டியை அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகியவை நடத்துகின்றன.

சாபாவ்லோ:

உலக கோப்பை கால்பந்து போட்டி 4 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. கடந்த ஆண்டு கத்தாரில் நடந்த உலக கோப்பை போட்டியில் அர்ஜென்டினா சாம்பியன் பட்டம் பெற்றது.

வரும் 2026-ம் ஆண்டுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டியை அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்துகிறது. இதற்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தென் அமெரிக்க கண்டத்தில் நடைபெற்ற தகுதிச்சுற்று ஆட்டம் ஒன்றில் பிரேசில், பொலிவியா அணிகள் மோதின. இதில் பிரேசில் 5-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

இதில் நட்சத்திர வீரர் நெய்மர் 61 மற்றும் 93-வது நிமிடத்தில் என 2 கோல்கள் அடித்தார். இதன்மூலம் பீலேயின் சாதனையை நெய்மர் முறியடித்தார்.

மறைந்த பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே சர்வதேச போட்டிகளில் 77 கோல்கள் அடித்து இருந்தார். 1957 முதல் 1971 வரையிலான காலகட்டத்தில் 92 போட்டிகளில் இந்த கோல்களை அடித்தார்.

அவரது சாதனையை நெய்மர் ஏற்கனவே சமன் செய்தார். தற்போது அடித்த 2 கோல்கள் மூலம் பீலேயின் சாதனையை அவர் முறியடித்தார்.

31 வயதான நெய்மர் 125 சர்வதேச போட்டியில் விளையாடி 79 கோல்கள் அடித்துள்ளார். இதன்மூலம் அதிக கோல்கள் அடித்துள்ள பிரேசில் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

சர்வதேச அளவில் அதிக கோல்களை அடித்த வீரர்களில் நெய்மர் 9-வது இடத்தில் உள்ளார். அவர் 2010 முதல் சர்வதேச போட்டிகளில் ஆடி வருகிறார்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்ச்சுக்கல்) 123 கோல் அடித்து (200 போட்டி) முதல் இடத்தில் உள்ளார். மற்றொரு நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்சி (அமெரிக்கா) 103 கோல்களுடன் (175 ஆட்டம்) 3-வது இடத்தில் உள்ளார்.

Tags:    

Similar News