வாஸ்து நாள் இன்று- வாஸ்து பகவான் உருவான கதை
- வாஸ்து பகவான் ஒன்றரை மணிநேரம்தான் கண் விழித்திருப்பார்.
- வீடு, மனை, கட்டிடங்களின் அமைப்பை தீர்மானிப்பது தான் வாஸ்து சாஸ்திரம்.
வாஸ்து பகவான் கண்விழிக்கும் நாள் தான் வாஸ்து நாள் என்று அழைக்கப்படுகிறது. யார் அந்த வாஸ்து பகவான் அவர் எப்படி தோன்றினார் என்று பார்க்கலாம்.
சிவ பெருமான் அந்தகாசுரன் என்பவனை வதம் செய்தார். அப்போது சிவன் நெற்றியில் இருந்து வழிந்த வியர்வையில் இருந்து ஒரு பூதம் கிளம்பியது. அது தன் பசி நீங்க சிவனை எண்ணி தவமிருந்து பூமியை விழுங்கும் சக்தியை பெற்றது. பிரம்மா உள்ளிட்ட தேவர்கள் பூமியை விழுங்க முயன்ற பூதத்தைக் குப்புறத் தள்ளி எழாதபடி அழுத்திப் பிடித்துக் கொண்டனர். பசியால் வாடிய பூதத்திடம், "இன்று முதல் நீ வாஸ்து புருஷன் என்று அழைக்கப்படுவாய். பூமியைத் தோண்டிக் கட்டிடம் கட்டும் போது செய்யும் பூஜையின் பலன் உனக்கு கிடைக்கும்," என்று கூறினர். மத்ஸ்ய புராணத்தில் இந்த வரலாறு கூறப்பட்டுள்ளது.
வாஸ்து நாள் எப்போது வரும்:
ஒரு வருடத்தில் எட்டு வாஸ்து நாட்கள் மட்டுமே வரும். சித்திரை, வைகாசி, ஆடி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி என எட்டு மாதங்களில் வரும் எட்டு நாள்களிலும் வாஸ்து பகவான் ஒன்றரை மணிநேரம்தான் கண் விழித்திருப்பார்.
வாஸ்து பகவான் விழித்திருக்கும் நாட்களில் ஒருநாளில் ஒன்றரை மணி நேரம் மட்டுமே விழித்திருப்பார் என்கிறார்கள் ஜோதிடர்கள். அப்படி அவர் விழித்ததும் காலையிலேயே நீராடுவார் என்றும் பூஜைகள் செய்வார் என்றும் ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர். இதையடுத்து பூஜைக்குப் பின்னர் உணவு எடுத்துக் கொள்வார். அப்படி நிம்மதியும் நிறைவுமாக இருக்கும் தருணம்தான், வாஸ்து பூஜைக்கான நேரம். பூமி பூஜைக்கான நேரமாகும்.
வாஸ்து புருஷனை, கீழே தள்ளி அவன் மேல் 53 தேவதைகள் அவன் முதுகில் அமர்ந்த இடம் தான் வாஸ்து மண்டலம் என்று குறிப்பிடப்படுகிறது. வாஸ்து மண்டலம் சதுரமாக அமைந்திருக்கும். வாஸ்துவை பிரம்மதேவன் காப்பாற்றி அருளியதால், வீட்டின் நடு பாகம் பிரம்மாவுக்காக கொடுக்கப்பட்டிருக்கிறது. மனையடி சாஸ்திரம் இதனை பிரம்ம ஸ்தானம் என்றே விவரிக்கிறது.
வாஸ்து சாஸ்திரம்:
வீடு, மனை, கட்டிடங்களின் அமைப்பை தீர்மானிப்பது தான் வாஸ்து சாஸ்திரம். முன்னர் சொன்னது போல் வாஸ்து பகவான் அந்த எட்டு நாள்களிலும் ஒன்றரை மணிநேரம் கண்விழித்திருக்கும் நேரம் தான் வாஸ்து பூஜை, பூமி பூஜை செய்வதற்கு உகந்த நேரம் ஆகும். கட்டடம் கட்டுவதற்கும் பஞ்சபூத சக்திகளுக்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. அதன்படி பூமியின் இலகுத்தன்மையைக் கணக்கெடுத்து வைத்துள்ளனர். பூமியின் இலகுத்தன்மையைப் பயன்படுத்தி, அந்த நாளில் வாஸ்து வழிபாடு செய்தால், கட்டடம் கட்டும்பணி எந்தவிதத் தடையுமில்லாமல், நல்லவிதமாக வளர்ச்சி பெறும்.
வாஸ்து பூஜை எப்போது செய்யலாம்:
சித்திரை, வைகாசி, ஆடி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி என எட்டு மாதங்களில் வரும் வாஸ்து நாட்களில் பூமி பூஜை செய்யலாம். வாஸ்து பூஜை செய்ய திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய கிழமைகள் சிறந்தவை. ரிஷபம், மிதுனம், விருச்சிகம் மற்றும் கும்ப லக்கினம் சிறந்தது.
ஆகவே, வீட்டிற்கு வாஸ்து பூஜை செய்ய நினைப்பவர்கள் வைகாசி 21-ந்தேதி ஆன நாளை செய்யலாம். மேலும் புதன்கிழமையும் சேர்ந்து வருவதால் வாஸ்து செய்ய உகந்தநாளாகும்.