வழிபாடு

திருப்பைஞ்சீலியில் உள்ள நீலிவனநாதர் கோவிலில் திருக்கட்டமுது பெருவிழா நாளை நடக்கிறது

Published On 2023-05-12 12:07 IST   |   Update On 2023-05-12 12:07:00 IST
  • 14-ந்தேதி திருநாவுக்கரசர் குருபூஜை விழா நடைபெறுகிறது.
  • ஞாயிற்றுக்கிழமை மகேஸ்வர பூஜை, அன்னம்பாலிப்பு நடைபெறும்.

திருச்சி, திருகற்குடி, திருப்பராய்த்துறை ஆகிய சிவ தலங்களை தரிசித்து விட்டு திருநாவுக்கரசர் (அப்பர்) திருப்பைஞ்சீலியை நோக்கி சென்று கொண்டிருந்தார். காவிரியை கடந்து திருப்பைஞ்சீலியை நோக்கி நடந்த அப்பர் பசியாலும், தாகத்தாலும் வருந்தினார்.

கோவிலுக்கு வரும் வழியில் சிவபெருமான் ஒரு சோலையையும், குளத்தையும் உண்டாக்கினார். சோலையில் ஓய்வெடுத்த அப்பர் முன் அந்தணர் ரூபத்தில் தோன்றிய சிவபெருமான், அப்பரை அழைத்து, `என்னிடம் கட்டு சோறு உள்ளது. உண்டு பசியாறி செல்லலாம்' என்றார்.

அதன்படி சாப்பிட்டு பொய்கையில் நீர் அருந்தி இருவரும் நடந்தனர். கோவிலுக்குள் சென்றதும் அந்தணராக வந்த சிவபெருமான் மாயமானார். அப்போது தான் இறைவனே அந்தணராக வந்து தனக்கு உணவு அளித்ததை உணர்ந்தார் அப்பர்.

`என் பசியும், தாகமும் தீர்க்க வந்தனையே' என்று அப்பர் பெருமான் மெய்யுருகி பதிகம் பாடினார். இந்த நாளை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் திருக்கட்டமுது பெருவிழா திருப்பைஞ்சீலியில் நடப்பது வழக்கம். இந்த நன்னாளில் சிவனை வழிபட்டால் அன்னதோஷங்கள் விலகும். வயிற்று நோய்கள் குணமாகும்.

அதன்படி இந்த ஆண்டு திருக்கட்டமுது பெருவிழா நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது. 14-ந்தேதி திருநாவுக்கரசர் குருபூஜை விழா நடைபெறுகிறது. இதையொட்டி நாளை காலை 10 மணிக்கு சாமி புறப்பாடும், பகல் 12 மணிக்கு திருநாவுக்கரசருக்கு திருக்கட்டமுது அளித்தல் நிகழ்ச்சியும், பகல் 12.30 மணிக்கு சிவனடியார்களுக்கு அன்னம் பாலிப்பும் நடைபெறுகிறது.

அதைத்தொடர்ந்து மாலை 4 மணிக்கு சோறுடைய நாயகரும், அப்பர் சாமிகளும் ஆலயம் செல்லுதல், இரவு 7 மணிக்கு அர்ச்சனை மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு விசாலாட்சி சமேத நீலிவனேஸ்வரர் ரிஷப வாகனத்தில் அப்பர் சாமிகளுக்கு திருக்காட்சி அளித்தல் நிகழ்ச்சி, திருநாவுக்கரசர் தேவார பாராயணம், இரவு 10 மணிக்கு திருவீதி வலம், அன்னம்பாலிப்பு நடைபெறுகிறது.

நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு சிறப்பு அபிஷேக பூஜையும், காலை 11 மணிக்கு திருநாவுக்கரசர் குருபூஜையும் நடைபெறுகிறது. தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு, பிரசாதம் வழங்கப்படும். மதியம் 1 மணிக்கு மகேஸ்வர பூஜை மற்றும் அன்னம்பாலிப்பு நடைபெறும்.

மேலும் திருவிழாவையொட்டி நாளை மறுநாள் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை சிவனடியார்கள் மற்றும் ஓதுவார்கள் குழுவினரின் அருளுரை மற்றும் தேவார இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தலைமையில் கோவில் பணியாளர்கள் மற்றும் ஆறுநாட்டு வேளாளர் தலைமை சங்கத்தினர் செய்து வருகிறார்கள்.

Similar News