மார்கழி மாதம் முழுவதும் திருப்பரங்குன்றம் கோவிலில் தினமும் 500 பக்தர்களுக்கு காலை உணவு
- மார்கழி மாதத்தில் நடைதிறப்பு நேரம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
- தற்போது பகல் 12 மணிக்கு 175 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தினமும் மதியம் 12 மணியளவில் 175 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு என்று 125 பேரும், இந்த கோவிலின்துணை கோவிலான சொக்கநாதர் கோவிலுக்கு என்று 50 பேரும் என்று தினமும் 175 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
ஒரு கூட்டு, ஒரு பொறியல், ரசம், மோர், சாம்பாருடன் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இதே சமயம் வெள்ளிக்கிழமைதோறும் வழக்கமான கூட்டு, பொறியலுடன் கூடுதலாக பாயாசம், வடையுடன் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது
இந்த நிலையில் முதல்முறையாக மார்கழி 1 முதல் மார்கழிமாதம் முழுவதுமாக தினமும் காலை 8 மணி முதல் 11 மணி வரை 500 பக்தர்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. இதுகுறித்து கோவில் துணை கமிஷனர் நா.சுரேஷ் கூறியதாவது:- மார்கழி மாதத்தில் 500 பக்தர்களுக்கு தினமும் காலை உணவு வழங்கப்பட உள்ளது.
இதற்காக கோவில் வளாகத்தில் உள்ள சமையல் கூடத்தில் சமைத்து பக்தர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அடுத்த ஆண்டில் கார்த்திகை, மார்கழி ஆகிய 2 மாதமும் சராசரி 500 பக்தர்களுக்கு காலை உணவு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும். தற்போது பகல் 12 மணிக்கு 175 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் தினமும் காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பகல் 1 மணிக்கு நடைசாத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து மாலை 4 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு நடை சாத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வழக்கம்போல மார்கழி மாதத்தில் நடைதிறப்பு நேரம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதாவது நேற்று முதல் வருகிற 2023-ல் ஜனவரி மாதம் 14-ந்தேதி வரை (மார்கழி மாதம் முழுவதும்) தினமும் அதி காலை 4.30 மணிக்கு நடைதிறக்கப்பட்டு பகல் 12 மணிக்கு நடைசாத்தப்படுகிறது. பிறகு மீண்டும் மாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு இரவு 8 மணிக்கு நடைசாத்தப்படுகிறது. இந்த தகவலை கோவில் துணை கமிஷனர் சுரேஷ் தெரிவித்தார்.