நாச்சியார்கோவில் சீனிவாச பெருமாள் கோவிலில் முக்கோடி தெப்பத் திருவிழா தொடங்கியது
- 29-ந்தேதி உலகப்பிரசித்தி பெற்ற கல்கருட சேவை நடக்கிறது.
- விழா நாட்களில் பெருமாள், தாயார் வீதி உலா நடக்கிறது.
கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவிலில் வஞ்சுளவல்லி தாயார் உடனாய சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் முக்கோடி தெப்பத்திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
காலை பெருமாள், தாயார் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினர். பின்னர் கொடிமரத்திற்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு ஆராதனை செய்தனர். அதனை தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க கொடி ஏற்றம் நடைபெற்றது. அப்போது கொடிமரம் மற்றும் பெருமாள், தாயாருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் வருகிற 29-ந்தேதி உலகப்பிரசித்தி பெற்ற கல்கருட சேவை நிகழ்ச்சி நடக்கிறது. விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் பெருமாள், தாயார் வீதி உலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கூடுதல் (பொறுப்பு) கிருஷ்ணகுமார் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.