வழிபாடு

சுபகாரியங்களை நடத்தும் ஞாயிறு பிரதோஷ வழிபாடு

Published On 2024-04-20 07:52 GMT   |   Update On 2024-04-20 07:52 GMT
  • நந்திதேவருக்கு கூடுதலாக அருகம்புல், செவ்வரளி , வில்வம் கொண்டு சிவ நந்தி தரிசனம் செய்தால், வீட்டில் உள்ள கடன் தொல்லை நீங்கும்.
  • நம்மால் முடிந்த அபிஷேகப் பொருட்களை வழங்கி, சிவ தரிசனம் செய்வது எல்லா வளங்களையும் தந்தருளும்.

"பிறவி தோஷங்களை போக்கும் தினம் பிரதோஷ தினம்" என்று சொல்வார்கள். மாதத்தில் வளர்பிறை மற்றும் தேய்பிறை காலங்களில் பிரதோஷம் வந்தாலும், வளர்பிறை காலத்தில் அதுவும் ஞாயிற்று கிழமைகளில் பிரதோஷம் வருவது விசேஷமானது. இப்படியான மிகச் சிறப்பான நாளைய தினத்தில் "சூரிய பகவான்" மற்றும் "சிவபெருமானை" போற்றி வழிபட வேண்டிய மந்திரம் இது.

சூரிய பகவான் மந்திரம்: ஆம் ஹுராம் ஹிரீம் ஹுராம் சஹ் சூரியாய் நமஹ

சிவ பெருமான் மந்திரம்: ஓம் நமோ பகவதே ருத்ராய

பிரதோஷ நேரமான மாலை வேலையில் கோவிலுக்கு சென்று முதலில் சூரிய பகவானை தரிசித்து, அவருக்கு நெய் தீபமேற்றி மந்திரத்தை 10 முறை உச்சரித்து வணங்க வேண்டும். இதனால் சூரிய தோஷம் நீங்கும்.


பிரதோஷ நேர பூஜையின் போது சிவபெருமானை வேண்டி மந்திரத்தை 9 முறை கூறி வணங்க வேண்டும். இம்மந்திரங்களை நாளை கூறி வழிபடுவதன் மூலம் நம் ஒவ்வொருவரின் உடல், மனம், ஆன்மா தூய்மை பெற்று ஆன்மிகச் சிந்தனை நமக்குள் நிறையும். அதோடு நமது கர்ம வினைகள் நீங்கி நன்மைகள் பெருகும். சகல தோஷங்களும் விலகும். வாழ்வில் சந்தோஷம் நிலைக்கும் என்பது உறுதி.

பொதுவாக பிரதோஷ நேரம் என்பது, மாலை 4.30 முதல் 6 மணி வரை. ஞாயிற்றுக்கிழமையன்று ராகு காலம் என்பதும் இந்த நேரம்தான். அதாவது மாலை 4.30 முதல் 6 மணி வரை. எனவே நாளை ராகுகாலமும் பிரதோஷ தருணமும் சேர்ந்து வரும் இந்த நாளில், சிவ தரிசனம் செய்வது மிகுந்த பலன்களை வாரி வழங்கும் என்கிறார்கள்.

நாளை மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான அந்த நேரத்தில், சிவனாருக்கும் நந்திதேவருக்கும் விசேஷ அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெறும். அப்போது, 16 வகையான பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெறும். நம்மால் முடிந்த அபிஷேகப் பொருட்களை வழங்கி, சிவ தரிசனம் செய்வது எல்லா வளங்களையும் தந்தருளும்.

முடிந்தால் வில்வமும், செவ்வரளியும் சார்த்துங்கள். நந்திதேவருக்கு கூடுதலாக அருகம்புல், செவ்வரளி , வில்வம் கொண்டு சிவ நந்தி தரிசனம் செய்தால், வீட்டில் உள்ள கடன் தொல்லை நீங்கும். தரித்திரம் விலகும். சுபிட்சம் நிலவும். வீட்டில் தடைப்பட்ட சுபகாரியங்கள் நடந்தேறும் என்பது உறுதி. சகல தோஷங்களும் விலகும். சந்தோஷம், பெருகும்; நிலைக்கும் என்பது ஐதீகம்.

Tags:    

Similar News