வழிபாடு

சொர்ணமுகி ஆற்றுக்கு ஜல ஆரத்தி சிறப்பு பூஜை நடந்தபோது எடுத்த படம்.

ஸ்ரீ காளஹஸ்தியில் சொர்ணமுகி ஆற்றுக்கு ஜல ஆரத்தி சிறப்பு பூஜைகள்

Published On 2022-11-23 07:35 GMT   |   Update On 2022-11-23 07:35 GMT
  • பெண்கள் சொர்ணமுகி ஆற்றில் தீபங்களை ஏற்றி வழிபட்டனர்.
  • ஆற்றில் நெய் தீபங்களை விட்டனர்.

திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் அருகில் உள்ள சொர்ணமுகி ஆற்றுக்கு கடந்த 2019-ம் ஆண்டு முதன்முறையாக, ஜல ஆரத்தி எனப்படும் மகா தீபாராதனை செய்யப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகள் கொரோனா தொற்று பரவல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று மாத சிவராத்திரி என்பதாலும், தெலுங்கு கார்த்திகை மாதத்தின் இறுதி நாள் என்பதாலும் இரவு 7 மணி முதல் மகா தீபாராதனைகள் வேத பண்டிதர்களால் நடத்தப்பட்டது.

ஸ்ரீகாளஹஸ்தி அதன் சுற்றுப்பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் மகா ஆரத்தி காண்பதற்காக திரண்டு வந்திருந்தனர். இரவு 7 மணிக்கு தொடங்கிய சொர்ணமுகி ஆரத்தி நிகழ்ச்சி 9 மணி வரை தொடர்ந்து 2 மணி நேரம் நடைபெற்றது.

முன்னதாக கோவில் வேத பண்டிதர்கள் சொர்ணமுகி ஆற்றுக்கு சாஸ்திர பூர்வமாக சிறப்பு பூஜைகள் நடத்தியதோடு, ஆற்றில் நெய் தீபங்களை விட்டனர். ஆற்றில் தண்ணீர் செல்லும்போது எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடக்காமல் இருக்கவும், விவசாய பயிர்கள் நன்றாக விளைந்து விவசாயிகள் சந்தோசமடைய வேண்டுமென்றும் வேண்டினர்.

சிறப்பு பூஜைகளை தொடர்ந்து பெண் பக்தர்கள் சொர்ணமுகி ஆற்றில் கார்த்திகை தீபங்களை ஏற்றி வழிபட்டனர். இதில் ஸ்ரீ காளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ. மது சூதன் ரெட்டி, சிவன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சுரு தாரக சீனிவாசலு, நிர்வாக அதிகாரி கே.வி.சாகர் பாபு, துணை நிர்வாக அதிகாரி கிருஷ்ணா ரெட்டி உள்பட நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News